யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
சென்னை:யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்பதை யோசித்து ஓட்டளிக்குமாறு, பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட, 'வீடியோ' பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு நடிகனாக, அரசியல் கட்சி தலைவராக இல்லாமல், தமிழகத்தில் வாழ்கிற, தமிழில் சிந்திக்கிற ஒருவராக, மக்களிடம் பேசுகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த தேர்தல் தெற்கிற்கும், வடக்கிற்குமான தேர்தல். முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை, தீர்மானிக்கும் தேர்தல்.
சுருக்கமாக சொன்னால், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த முடிவுகளை, சென்னையில் எடுக்க வேண்டுமா அல்லது டில்லியில் இருந்து சொல்லி, நமக்கு செய்தி வர வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் தேர்தல். கடந்த ஐந்தாண்டுகளில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால், தமிழகம் அனைத்து துறைகளிலும், முதலிடம் வகிக்கிறது. தி.மு.க., அரசு செய்துள்ள சாதனைகள், முதல்வர் ஸ்டாலின், மீண்டும் தமிழகத்தை ஆளும் தகுதி படைத்தவர் என்பதை உறுதி செய்கிறது.
வெவ்வேறு தலைவர்கள். வெவ்வேறு காலகட்டங்கள். ஆனால், தமிழும், தமிழகமும், ஒரு போதும் தலை வணங்காது என்ற முழக்கம் ஒன்றுதான். இந்த கனவு இருக்கும் வரை, தமிழகத்தை எவராலும் வீழ்த்த முடியாது. இப்போதுள்ள நலத் திட்டங்கள் தொடர வேண்டும். உலக நாடுகளுக்கு இணையாக, தமிழகம் உயர வேண்டும். அதற்கு மீண்டும், தி.மு.க., வெற்றி பெற வேண்டும். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு யோசிக்காமல் ஓட்டளித்து விடாதீர்.
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும், யாரால் தமிழகத்தின் உரிமைகளுக்காக போராட முடியும், யாருக்கு உண்மையிலேயே, அந்த எண்ணம் இருக்கிறது என்பதை யோசித்து ஓட்டளிக்க வேண்டும். தி.மு.க.,வால் இது சாத்தியம் என்பதை வரலாறு சொல்கிறது. எனவே, நாளை காலையிலேயே, சீக்கிரம் சென்று ஓட்டளியுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு