பண பட்டுவாடாவுக்கு கட்சியினரை நம்பாத 'மாஜி' அமைச்சர்!

5

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''தேர்தல் நேரத்திலும் வசூல் வேட்டை தீவிரமா நடக்குல்லா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''சென்னையில கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்க, பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., இருக்குல்லா... கட்டட அனுமதி தொடர்பான முடிவுகளை எடுக்க, தலைமை திட்ட அதிகாரி மற்றும் துணை திட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கு வே...

''ஆனா, தாங்களா எந்த முடிவையும் எடுக்காத அதிகாரிகள், அது சம்பந்தமான விண்ணப்பங்களை, துறையின் மேலிடத்துக்கு அனுப்பிடுதாவ... மேலிடத்தில் இருந்து சிலர், விண்ணப்பதாரர்களுக்கு போன் போட்டு, சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் கட்டிங் வெட்டணும்னு பேரம் பேசுதாவ வே...

''இதுல உடன்பாடு ஏற்பட்டு, அவங்க சொல்ற இடத்துல தொகையை குடுத்தா தான், திட்டங்களுக்கு அனுமதி தர்றாவ... 'தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினர் குறுக்கீடு இல்லாம, அதிகாரிகள் நேர்மையா செயல்படுவாங்கன்னு பார்த்தா, இப்பவும் வசூல் வேட்டையை நிறுத்த மாட்டேங்காவளே'ன்னு விண்ணப்பதாரர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''தமிழக காங்., தலைவர்கள் அதிர்ச்சி ஆகிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''அவங்களுக்கு என்னங்க பிரச்னை...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதியில் சமீபத்துல காங்., - எம்.பி., ராகுல் பிரசாரம் செஞ்சாரே... மேடையில, தமிழக காங்., தலைவர்கள், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கருடன், அந்த கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்திக்கும், 'சீட்' போட்டிருந்தாங்க பா...

''ராகுலும், பிரவீனும் ரொம்ப நேரம் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க... அதுக்கு முன்னாடி, ஹெலிகாப்டர்ல வந்திறங்கிய ராகுலை வரவேற்கவும் அவர் வந்திருந்தாரு... அங்கயும், அவரிடம் ராகுல் உற்சாகமா பேசினாரு பா...

''இந்த பிரவீன் தான், த.வெ.க., தலைவர் விஜயை அடிக்கடி பார்த்து கூட்டணிக்கு பேச்சு நடத்தினாரு... 'தி.மு.க., கூட்டணி வேண்டவே வேண்டாம்'னு பகிரங்கமாகவும் கருத்து சொல்லியிருந்தாரு பா...

''இதுக்காக, 'அவர் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு மேலிடத்துக்கு தமிழக காங்., தலைவர்கள் புகார் அனுப்பியிருந்தாங்க... ஆனா, அதை எல்லாம் கண்டுக்காத ராகுல், அவருடன் கொஞ்சி குலாவியது, தமிழக காங்., தலைவர்களுக்கு அதிர்ச்சியை குடுத்திருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''கட்சி நிர்வாகிகளை ஓரங்கட்டிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''கடலோர தென் மாவட்டத்துல, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருத்தர் போட்டியிடுறாரு... ஏற்கனவே, கூட்டணி கட்சியினரை ஓரங்கட்டிய அவர், இப்ப சொந்த கட்சியினரையும் தள்ளி வச்சுட்டாருங்க...

''கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துலயே, 'வாக்காளர்களுக்கு கடைசி நேர பண பட்டுவாடாவை, என் சொந்தக்காரங்களே செய்வாங்க... கட்சியினர் கூட போனா மட்டும் போதும்'னு சொல்லிட்டாருங்க...

''ஏன்னா, 2021 தேர்தலில் வாக்காளர்களுக்கு குடுத்த பணத்தை, சில நிர்வாகிகள், 'ஆட்டை' போட்டு, 'மாஜி' அமைச்சர் தோத்தும் போயிட்டாருங்க... அதனால, இந்த முறை உஷாராகி, உறவினர்களிடம் பொறுப்பை ஒப்படைச்சிட்டாரு... இதனால, கட்சி நிர்வாகிகள் பயங்கர கடுப்புல இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''செல்லபாண்டியன், கிளம்பறோம்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement