நடைமுறைப்படுத்த விட்டு விடுவரா?

2

எஸ்.சுப்பிரமணியம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், வெற்றி பெற்ற பின், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்றால், அவர்களை பதவியில் இருந்து நீக்கும் உரிமை பெற வேண்டும்' என பார்லிமென்டில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ராஜ்யசபா துணைத் தலைவரும், எம்.பி.,யுமான ராகவ் சதா கூறியுள்ளார்.
இந்த உரிமை முழக்கம் இன்று உள்ளவர்களுக்கு புதிதாக இருக்கலாம்; ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலேயே, அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் இது!

எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் சேவை செய்யாமல், பார்லிமென்ட், சட்டசபைகளில் உள்ள கேன்டீன்களுக்கு சென்று, மலிவு விலை உணவுகளை உண்பதிலும், சக உறுப்பினர்களோடு உரையாடி பொழுது போக்குவதிலும், உறுப்பினருக்கான சலுகைகளை அனுபவிப்பதிலும் மட்டுமே குறியாக இருந்தால், அவர்கள், எம்.எல்.ஏ.,க்களாக இருந்தால், தொகுதி மக்கள் 1,000 பேர்களும், எம்.பி.,க்களாக இருந்தால், 5,000 பேர்களும் கையெழுத்திட்டு மனு அளித்தால், அந்த உறுப்பினரின் பதவியை பறிக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வேண்டும் என்று, முதன் முதலில் முழங்கியவர் எம்.ஜி.ஆர்., தான்!

'பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் திட்டம்' என்று, அதற்கு பெயரும் கொடுத்திருந்தார்.

துரதிருஷ்டவசமாக, பதவி வெறி கொண்ட கூட்டத்தால், அது நடைமுறைக்கு வரவில்லை.

இப்போது, ஆம் ஆத்மி எம்.பி., அதை வழி மொழிந்துள்ளார்.

இது, 'புதிய மொந்தையில் பழைய கள்ளு' தான் என்றாலும், மகளிருக்கான, 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கே முட்டுக்கட்டை போட்ட கூட்டம், தங்கள் தலையில் தாங்களே கொள்ளி வைத்து கொள்ளும் வேலையை நடைமுறைப்படுத்த விட்டு விடுவரா என்ன?


எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது!



டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான் ஒருவரை முதல்வராக நியமித்து விட்டு சிறைக்குச் சென்றேன்; விடுதலையாகி வந்தவுடன் முதல்வர் பதவியை திருப்பித் தராமல், அ.தி.மு.க., வில் இருந்து என்னை நீக்கி விட்டார். நாய் கூட நன்றி விசுவாசத்துடன் இருக்கும்' என்று பிரசார கூட்டத்தில் பேசி வருகிறார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

சசிகலா ஆணைப்படி தான் என்றாலும், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் தான், பழனிசாமி முதல்வரானார்.

முதல்வர் பதவியை அவர் திருப்பித்தர மறுத்து விட்டார் என்றால், அதே எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி, அவரை பதவியில் இருந்து துாக்க வேண்டியது தானே?

இதேபோல், பன்னீர்செல்வம் நடந்திருந்தால் சசிகலாவை போல் ஜெயலலிதா தனிக்கட்சி ஆரம்பித்து, 'துரோகி, நாய், பேய்' என்று வசைமாறிக் கொண்டிருக்க மாட்டார்.

ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் பன்னீரை நீக்கிவிட்டு, முதல்வர் ஆசனத்தில் அமர்ந்து, பன்னீர் செல்வம் ஆரம்பகாலத்தில் செய்து வந்த டீ கடைக்கே விரட்டி அடித்திருப்பார். அதுபோன்று சசிகலாவால் ஏன் செய்ய முடியவில்லை?

காரணம், சசிகலாவிற்கு அ.தி.மு.க.,வில் செல்வாக்கு இல்லை.

அதனால்தான் பழனிசாமியை வீழ்த்த, தி.மு.க.,வுடன் மறைமுக கூட்டணி அமைத்துள்ளார்.

சசிகலா காலில் பழனிசாமி விழுந்த புகைப்படத்தை, 10 ஆண்டுகளாக தமிழகம் பார்த்துக் கொண்டு தான் வருகிறது. ஆனாலும், சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இப்போட்டோக்களை உதயநிதி தன் பிரசார கூட்டங்களில் காண்பிக்கிறார் என்றால், அதற்கு காரணம் சசிகலா.

அவருக்கு சொந்தமான ஊடகம்தான் இப்புகைப்படங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. சசிகலாவிடமிருந்து வாங்கித்தான் ஒவ்வொரு புகைப்படத்தையும், ஒவ்வொரு தேர்தலில் காண்பித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார், உதயநிதி.

அவரது செயலை ஆமோதித்து, பாராட்டுச் சான்றிதழ் வேறு வழங்குகிறார் சசிகலா.

அ.தி.மு.க., தன்வசம் இருக்க வேண்டும்; இல்லையென்றால், அக்கட்சி அடியோடு அழிய வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவுக்கு!

அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில், வில்லன் நடிகர் அசோகனுடன் கூட்டு சேர்ந்து, வில்லியாக நடித்திருந்த ஜெயலலிதா, 'வேங்கையன் வம்சத்தையே அழிக்க வேண்டும்' என்று ஆக்ரோஷமாக சொல்லுவார்.

அன்று, சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு எதிராக ஜெயலலிதா செய்ததை, இன்று அவரது தோழி சசிகலா நிஜத்தில் செய்கிறார்.

எதிரியுடன் கூட்டு சேர்ந்து, எம்.ஜி.ஆர்., பெயரில் கட்சி ஆரம்பித்து, அவரது கட்சியை அழிக்க நினைக்கும் சசிகலாவை, எம்.ஜி.ஆரின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது!


பொய் விளம்பரம் தேடுவாரா?



வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி, தி.மு.க., என்பதற்கு இணங்க, அக்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலை முன்னிட்டு அடுக்கடுக்கான பொய்களை கூறி வருகிறார்.

அவ்வகையில், 'மாநில அரசுகள் நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகையைக் குறைத்து, அதற்கு பதிலாக எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறு தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்கு உதவலாம்; இதன் வாயிலாக, மாநில அரசுகள் எண்ணெய், பருப்பு இறக்குமதிகளை குறைத்துக் கொள்ளலாம்' என்று, மத்திய அரசு மாநிலங்களுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது.

உடனே, 'மத்திய பா.ஜ., அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையைக் குறைக்கும்படி, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது. விவசாயிகளுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது பாருங்கள்...' என்று நீலிக்கண்ணீர் வடித்து பொய் பிரசாரம் செய்து வருகிறார், ஸ்டாலின்.

அதுமட்டுமா... தமிழகப் பொருளாதாரம் இரட்டை இலக்கை அடைந்ததற்கு, கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் காரணம் என்று வேறு பொய் கூறுகிறார்.

கடந்த ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் தான், தமிழக பொருளாதாரம் இரட்டை இலக்கை அடைந்துள்ளதே தவிர, தி.மு.க., ஆட்சியில் போட்ட ஒப்பந்தங்களால் அல்ல!

எந்தவொரு மாநிலமும், ஐந்து ஆண்டில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி விட முடியாது; அதுவும், எதிலும், கலெக் ஷன், கரப்ஷன் என்று இருக்கும் தி.மு.க., ஆட்சியில் அதற்கு சாத்தியமே கிடையாது. ஆனாலும், அடுத்தவர் வாங்கிய மதிப்பெண்ணுக்கு, தனக்கு பட்டம் கொடுக்க வேண்டும் என்று கூறி மல்லுக்கட்டுவதில் வல்லவராக இருக்கிறார் ஸ்டாலின்.

இல்லையென்றால், மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு, தி.மு.க., 'ஸ்டிக்கரை' ஒட்டி பொய் விளம்பரம் தேடுவாரா?

Advertisement