ஹிந்தி பாடத்திற்கு தர மதிப்பீடு: அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வில் ஹிந்தி உட்பட மூன்றாம் மொழி படங்களுக்கு தர மதிப்பீட்டுக்கு பதிலாக மதிப்பெண்களே வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'மறு பரிசீலனை செய்ய' கோரி தாக்கல் செய்த அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.

கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வில், ஹிந்தி உட்பட மூன்றாம் மொழி பாடங்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக, தரமதிப்பீடு வழங்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து பெங்களூரை சேர்ந்த இருவர் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்து அபராதம் விதித்தது.

அரசின் உத்தரவை எதிர்த்து, சிக்கமகளூரை சேர்ந்த மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் படி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1.75 லட்சம் பேர் இம்மனு, நீதிபதி இந்திரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வக்கீல் சசிகரன் ஷெட்டி: ஹிந்தி உட்பட பிற மொழி பாடங்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக, தரமதிப்பீடு வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.

கடந்தாண்டு 1.50 லட்சம் முதல் 1.75 லட்சம் மாணவர்கள், மூன்றாம் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். மற்ற மாநிலங்களை போன்றில்லாமல், கர்நாடகாவில் இரு மொழி கொள்கை இல்லை. மும்மொழி கொள்கை உள்ளது. தரமதிப்பீடு வழங்குவதில் எந்த பிரச்னையும் இருக்காது.

பொது தேர்வு எழுதும் 15 - 16 வயதுள்ள மாணவர்கள், தேர்வில் தோல்வி அடைவதால், அவர்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கிறது. கிராமப்புறங்களில் 80 சதவீதம் மாணவர்கள் ஹிந்தியில் தோல்வி அடைகின்றனர்.

நீதிபதி இந்திரேஷ்: அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது உங்கள் நோக்கமா? நாங்கள் படிக்கும்போதும் இதே அழுத்தத்தில் தான் இருந்தோம். தமிழ், தெலுங்கு, உருது ஆகிய முதல் மொழியாக இருக்கும் இடங்களில் எல்லாம், கன்னடம் மூன்றாவது மொழியாக இருக்கிறது. ஹிந்தி கற்பிக்க நல்ல ஆசிரியர்களை நியமியுங்கள்.

அரசு வக்கீல்: நல்ல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி: 10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பின், மாநில அரசு, 2026 ஏப்., 10ம் தேதி வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இறுதி அறிக்கை வெளியிடவில்லை.

சட்டப்படி விதிகள் அமலில் இல்லாததாலும், ஆவணங்களில் எந்த குறைபாடும் இல்லாததாலும், முந்தைய உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

கடந்த 2025 அக்., 28ல் மாநில அரசு, 10ம் வகுப்பு தேர்வை நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதன்படி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஏப்., 2ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவடைந்த பின், மாநில அரசு வரைவு விதிகளை வெளியிட்டு உள்ளது.

வரைவு விதிகள் தொடர்பாக, மாநில அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக மாநில அரசு எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இவ்விஷயத்தில் நீதிமன்றம் தலையிடாது. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முதல்வருடன் ஆலோசனை

நீதிமன்ற தீர்ப்பு குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பேட்டி:

நீதிமன்ற உத்தரவு குறித்து அரசு தலைமை வக்கீலிடம் பேசினேன். இது தொடர்பாக முதல்வருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். நாளை (இன்று) முதல்வரை சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பேன். நீதிமன்ற வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் யாரும் பீதியடைய வேண்டாம். நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்க வேண்டும். அதை ஆய்வு செய்து, தகுந்து முடிவெடுப்போம். 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் பெரிய தாமதம் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement