மேகதாது அணை திட்டம் விரிவான திட்ட அறிக்கை

சாம்ராஜ்நகர்: ''மேகதாது அணை திட்டத்திற்காக 10 நாட்களில், மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்படும். திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, ஷோபா ஆகியோரின் ஒத்துழைப்பு தேவை,'' என துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.

சாம்ராஜ்நகர் குண்டுலுபேட்டில் நடந்த அரசு நிகழ்ச்சியில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

நாங்கள் ஏற்கனவே ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். ஆறாவது வாக்குறுதியாக நில உரிமை பத்திரங்களை வழங்கி வருகிறோம். இதுவரை 1,11,111 பேருக்கு இலவசமாக நில உரிமை பத்திரம் வழங்கப்பட்டு உள்ளது. எங்களின் ஏழாவது வாக்குறுதி மாநிலம் முழுதும் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்புவது.

மேகதாது அணை விவகாரத்தில் 'நமது தண்ணீர் நமது உரிமை' என்று, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வருகிறோம். உச்ச நீதிமன்றத்திலும் நமக்கு நீதி கிடைத்து உள்ளது. திட்டத்தை நிறைவேற்ற இறுதி முடிவு எடுப்பது மத்திய அரசின் கையில் உள்ளது.

இதற்காக மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, ஷோபாவின் ஒத்துழைப்பு நமக்கு தேவை. ஒரு முறை சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

புதிதாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து உள்ளோம். பத்து நாட்களில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். திட்டத்தை செயல்படுத்தும் அலுவலகத்தை ஏற்கனவே துவங்கி விட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement