22 வயது காதலனை மணந்த 37 வயது பெண் போலீசில் தஞ்சம்

மைசூரு: கணவரை இழந்த 37 வயது பெண், 14 வயது மகனை தவிக்க விட்டு, 22 வயது இளைஞருடன் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு வழங்கும்படி போலீசில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பெங்களூரு செல்லகட்டாவை சேர்ந்தவர் கவிதா, 37. எட்டு ஆண்டுகளுக்கு முன், இவரின் கணவர் குறைந்த ரத்த அழுத்தத்தால் உயிரிழந்தார். பெற்றோர் வீட்டில் இருந்தபடி, வீட்டு வேலை செய்து, 14 வயது மகனை கவிதா காப்பாற்றி வருகிறார்.

அப்போது மைசூரு ராமனஹள்ளியை சேர்ந்த பாஸ்கர், 22, என்பவருடன் கவிதாவுக்கு அறிமுகம் கிடைத்தது. ஆட்டோ ஓட்டுநராக உள்ள பாஸ்கர், அவ்வப்போது கவிதா, அவரின் தாயார் பாக்கியம்மாவை அழைத்து கொண்டு கோவில்களுக்கு அழைத்து சென்று வந்தார். இது நட்பாகி, காதலாக மாறியது.

கணவரை இழந்த கவிதாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க, பெற்றோர் நினைத்தனர். ஆனால், அவரோ, தனது 14 வயது மகனை விட்டு விட்டு, பாஸ்கருடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஓடிவிட்டார். மைசூரு ஒன்டிகொப்பாலில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையில், கவிதாவின் தந்தை மல்லிகார்ஜுன், தன் மகளை பாஸ்கர் கடத்தி சென்றதாக, போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தபோது, தான் விரும்பியே பாஸ்கருடன் வந்ததாக கவிதா தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மைசூரு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்த கவிதா - பாஸ்கர், மறைந்த தன் கணவரின் சகோதரர் மகன், எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு வழங்கும்படியும் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement