சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஜப்பான் அரசு அனுமதி

டோக்கியோ: இரண்டாம் உலகப் போருக்குப் பின், தன் சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் தடையை நீக்கி பாதுகாப்பு விதிகளில் ஜப்பான் அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் பெரும்பாலும் கண்காணிப்பு, மீட்பு போன்ற அமைதியான பயன்பாட்டுக்கான ஆயுதங்களுக்கு மட்டுமே ஏற்றுமதி அனுமதி இருந்தது.

இப்போது அந்த வரம்புகள் அகற்றப்பட்டு, அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அரசின் கடுமையான பரிசோதனைக்குப் பின் ஏற்றுமதி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான அமைச்சரவை நேற்று இந்த புதிய நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், போர் விமானங்கள், ஏவுகணைகள், அழிக்கும் கப்பல்கள், போர் ட்ரோன்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம்.

சீனா மற்றும் வட கொரியாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜப்பான் தன் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், போர் நடைபெறும் நாடுகளுக்கு கொடிய ஆயுதங்கள் வழங்கப்படாது என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement