ஆந்திர முன்னாள் முதல்வர் பாஸ்கர் ராவ் காலமானார்
ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வர் நாதென்ட்லா பாஸ்கர் ராவ், 90, உடல்நலக்குறைவு காரணமாக தெலுங்கானாவின் ஹைதராபாதில் காலமானார்.
கடந்த 1978ல், காங்., சார்பில் முதன்முறையாக விஜயவாடா எம்.எல்.ஏ.,-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்கர் ராவ், அப்போதைய காங்., முதல்வர் சென்னா ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். இதன்பின், என்.டி.ராமா ராவ் துவங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
இந்த கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அவர், 1983ல், குண்டூர் மாவட்டத்தின் வேமூரு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ., ஆனார்.
என்.டி.ராமா ராவ் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது, அவருக்கு எதிராக புரட்சி செய்து, காங்., ஆதரவுடன் பாஸ்கர் ராவ் ஆட்சியை கைப்பற்றினார். 1984 ஆக., 16 - 1984 செப்., 16 வரை என, வெறும் 31 நாட்கள் மட்டுமே அவர் முதல்வராக பதவி வகித்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திர வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்த முதல்வர் இவர். இதற்கு எதிராக மாநிலம் முழுதும் என்.டி.ராமா ராவ் போராட்டம் நடத்தினார். பல்வேறு நெருக்கடிக்கு பின், முதல்வர் பதவியை பாஸ்கர் ராவ் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் ராவ், நேற்று உயிரிழந்தார். இவரது மகன் நாதென்ட்லா மனோகர், தற்போது ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கிறார். பாஸ்கர் ராவ் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
'புதுச்சேரி - தமிழகத்தில் காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை தொடாது'
-
தேர்தல் கமிஷனில் பொற்கொடி முறையீடு
-
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஓட்டளிக்க மக்கள் ஆர்வம்
-
திரு.வி.க., நகரில் ரவுடிகள் வலம்; தி.மு.க., வேட்பாளர் அலறல்
-
'பென்சில், பேனா, நோட்புக்' தொகுப்புடன் 'பூத்' கமிட்டியினருக்கு தலா ரூ.2,000
-
நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு