மனை திட்டங்கள் குறைப்பு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை

சென்னை: புதிதாக மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்துவதை, வீட்டுவசதி வாரியம் குறைத் துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொது மக்களுக்கு நியாயமான விலையில், வீடு, மனை கிடைப்பதற்கான திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுதும், பல்வேறு மாவட்டங்களில், ஒவ்வொரு ஆண்டும் புதிய மனைப்பிரிவு திட்டங்கள் அறிவிக்கப்படும்.

வாரிய திட்டங்களில், வீடு வாங்குவதை விட, காலி மனை வாங்க, மக்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். தற்போதைய சூழலிலும், குலுக்கல் நடத்தும் அளவுக்கு, மனை வாங்க மக்கள் ஆர்வமாக போட்டி போடுகின்றனர்.

ஆனால், வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், கடந்த சில ஆண்டுகளாக, சுய நிதி முறையில், அடுக்குமாடி வீடுகள் கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மனைப்பிரிவு திட்டங்களுக்கு முக்கியத்துவம் குறைந்துள்ளது.

இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக மனைப்பிரிவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றில், ஐந்து இடங்களில் மட்டுமே மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

எதிர்கால பயன்பாட்டுக்காக இருந்த காலி நிலங்களை, பழைய உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்கும் பணிகளில் வீட்டுவசதி வாரியம் ஈடுபட்டு வருகிறது.

இதனால், வரும் ஆண்டுகளில் புதிய மனைப்பிரிவு திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், மனைப்பிரிவுகளை செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், வீட்டுவசதி வாரியம், இதற்கு எதிரான போக்கில் செல்வது புதிராக உள்ளது.

வரும் ஆண்டுகளில், வீட்டு வசதி வாரியம், புதிதாக மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாரிய திட்டப்பகுதிகளில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, மனைப்பிரிவு திட்டங்களுக்கு பயன்படுத்துவதில் பல்வேறு சட்ட பிரச்னைகள் வருகின்றன. வழக்குகள் காரணமாக மனை மேம்பாட்டு செலவும் அதிகமாகிறது.

வழக்குகள் மற்றும் செலவு அதிகரிப்பால், மனைப்பிரிவு திட்டங்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சட்ட கெடுபிடியும், இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement