பெண்ணையாறு வழக்கு: தீர்ப்பாயம் அமைக்க 6 மாத அவகாசம் கோரி மத்திய அரசு மனு

- டில்லி சிறப்பு நிருபர் -:

தென் பெண்ணையாறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க கூடுதலாக ஆறு மாதம் அவகாசம் வழங்கக்கோரி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகம் - கர்நாடகா இடையிலான பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில், இரு மாநில பிரச்னையை தீர்க்கும் விதமாக, தனி தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும்' என, கோரிக்கை வைக்கப்பட்டது.

உடன்பாட்டு குழு இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்ததோடு, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நீர்வள ஆணையத்தின் தலைவர் குஷ்வேந்தர் ஒஹ்ரா தலைமையில் உடன்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது.

தென் பெண்ணையாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் எஸ்.வி.என்.பாத்தி ஆகியோர் அமர்வில் சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் மொத்தம் ஐந்து முறை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

'மேலும், சம்பந்தப்பட்ட இடத்தையும் உடன்பாட்டு குழு நேரில் சென்று ஆய்வு செய்து வந்துள்ளது. இருப்பினும் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும்' என, தெரிவித்தார்.

இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அந்த புதிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தென் பெண்ணை ஆறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஜல் சக்தி அமைச்சகம் துவங்கி உள்ளது.

குறிப்பாக, அமைச்சகங்களுக்கு இடையிலான கலந்தாய்வுகள் நிறைவு பெற்றுள்ளன.

பல்வேறு அமைச்சகங்களின் கருத்துகளையும் பரிந்துரைகளை கொண்டு, அமைச்சரவைக்கான வரைவுக் குறிப்பு ஜல் சக்தி அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வரைவு அறிக்கை இந்த வரைவுக் கு றிப்பு, மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்காக அமைச்சரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், தீர்ப்பாய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, சட்ட விவகாரத் துறையால் பரிசீலிக்கப்படும்.

அதற்குப் பிறகுதான் தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். எனவே இந்த பணிகளை முடிக்க கால அவகாசம் தேவை. இதற்கு ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

Advertisement