தமிழில் கும்பாபிஷேகம்: அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

20

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக விழாக்களில், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் இடம் பெற உத்தரவிட வேண்டும் என தாக்கலான வழக்கில், அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம், தாந்தோணியைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

பேரூர் ஆதீனம், குன்றக்குடி அடிகளார் போன்ற மடாதிபதிகளால், பல கோவில்களில் தமிழ் பக்தி மந்திரங்கள், தமிழ் பாடல்களை பயன்படுத்தி கும்பாபிஷேகம் நடத்தப் படுகிறது.

அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளிலும், தமிழ் மந்திரங்களை ஓதுவதற்காக தமிழ் சான்றோர்கள், ஓதுவார்களை அழைக்க வேண்டும்.

பல்வேறு வகையான கோவில்களில் பயன்படுத்தப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள் குறித்த விபரங்களை பரிந்துரைக்க, ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அக்குழுவின் அறிக்கையை பெற்று, யாகசாலை, கருவறை, கோபுர விமானத்தில், சமஸ் கிருதத்திற்கு இணையாக தமிழ் ஆன்மிக மந்திரங்கள், தமிழ் பக்தி பாடல்கள் இடம் பெறுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், 2026 செப்., 17ல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக விழாக்களிலும், சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் இடம் பெற வலியுறுத்தி, தமிழக அறநிலையத்துறை முதன்மை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த மனுவை, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் ஆஜரானார்.

இதையடுத்து, ''இவ்வழக்கில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் மற்றும் செயல் அலுவலர், அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

''அவர்கள் மனு தாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ஜூன் 2ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,'' என நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement