'பெருந்துறையில் சூரியனை உதிக்க செய்வோம்' வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் சூளுரை

பெருந்துறை, ஏ

பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம், தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை, பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று நிறைவு செய்தார். அப்போது அவர் பேசியதாவது: எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட்டை இழக்கும் வகையில், என்னுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்றிய தோழமை கட்சியினருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இப்பகுதியிலுள்ள கவுண்டர் சமுதாயத்தை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதி. அதனால் இன்று கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெறுகின்றனர். இதேபோல் அருந்தியர் சமுதாயத்துக்கு, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி, அனைவருக்கும் சமமான அரசு ஸ்டாலின் அரசு.

500 ரூபாய்க்காக கணவன், மகனை எதிர்பார்த்து நின்ற தாய்மார்களின் கவலையை போக்கி, மாதந்தோறும் வங்கி கணக்கில், 1,000 போட்டவர் ஸ்டாலின். மீண்டும் தி.மு.க., அரசு அமையும்போது, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க போகிறார் ஸ்டாலின். பகுடும்பத் தலைவிகள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொள்ள, 8,000 ரூபாய் மதிப்பு இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும் என்பது உள்பட, கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தார்.
நான் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்தபோது, மாவட்டத்தில் எட்டு தொகுதிகளும் பெற்ற வளர்ச்சியை பெருந்துறை தொகுதி பெற்றுள்ளது. பெருகி வரும் குடியிப்புகளின் குடிநீர் தேவையை கவனத்தில் கொண்டு, 250 கோடியில் புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன்.
ஊத்துக்குளி பகுதி மக்கள் வெகு தூரத்தில் இருந்து, என்னை தேடி வந்து குறைகளை சொல்ல வேண்டிய நிலையை தவிர்க்க, 'தோப்பு செயலி' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளேன். அதில் இருந்த இடத்தில் இருந்தபடியே எந்த நேரத்திலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் செய்த திட்டங்களை பட்டியலிட்டதுபோல், மற்றவர்களால் பட்டியலிட முடியுமா?
பெருந்துறை தொகுதி, 16 தேர்தல்களை சந்தித்துள்ளது. ஒரு முறை கூட தி.மு.க., வெற்றி பெற முடியவில்லை. அந்த வரலாற்றை இந்த தேர்தலில் மாற்றி காட்டுவோம். வரும் மே, 4ம் தேதி பெருந்துறையில் உதயசூரியனை உதிக்க செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement