பேரணி

தாராபுரம், தாராபுரத்தில் நேற்று நடந்த பிரமாண்ட பேரணி நிறைவில் பேசிய, திருப்பூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் 2.0 ஆட்சி, மீண்டும் மலரும் என கூறினார்.

தாராபுரம் காமராஜபுரத்தில் நேற்று மதியம், 12:00 மணியளவில், தி.மு.க.,வின் பிரசார பேரணி தொடங்கியது. நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் வாகனத்தில் நின்றவாறு, மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டாக்டர் இந்திராணி, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பூளவாடி பிரிவு, ஜின்னா மைதானம், மாரியம்மன் கோவில், 5 சாலை சந்திப்பு, பெரிய கடை வீதி, தென்தாரை, பஸ் ஸ்டாண்ட் வழியாக பேரணி சென்றது. மதிய உணவுக்கு பின் அமராவதி சிலை சந்திப்பில், தி.மு.க. மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் துவங்கிய பேரணி, பூக்கடை கார்னர் வழியாக பழைய நகராட்சி அலுவலகம் சென்றது. இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சி நடந்தது. பேரணியில் திரளான இளைஞர்கள், ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். நிறைவில் நடந்த கூட்டத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன் பேசியதாவது:
தொடர்ந்து, 11 தேர்தல்களில் வெற்றி பெற்று சாதனை செய்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். தற்போது, 12வது தேர்தலில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும், 2.0 ஆட்சி அமைக்க உள்ளார். சகோதரி இந்திராணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அவர் வெற்றி உறுதி. எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறோம் என்பதை, 4ம் தேதி தெரிந்து கொள்வோம். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட, 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement