புதுச்சேரியில் 95.2 டிகிரி வெயில் சாலைகள் வெறிச்சோடின
புதுச்சேரி: புதுச்சேரியில் அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே 95.2 டிகிரி வெயில் அடித்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சுற்றுலா தளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி நகரில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர்.
வழக்கமாக, அக்னி நட்சத்திரம் துவங்கினால் தான் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து பகலில் வெயில் சுட்டெரிக்கும்.
அக்னி துவங்குவதற்கு முன்பாகவே, கடந்த சில தினங்களாக புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதிக பட்சமாக கடந்த 10ம் தேதி 95 டிகிரி வெயில் பதிவானது.
அந்த வெப்பத்தையும் தாண்டி நேற்று 95.2 டிகிரி வெயில் அடித்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்தனர். அதையும் மீறி அவசர தேவைகளுக்காக வெளியே சென்றவர்கள் தலையில் துணியை போட்டு மூடி கொண்டும், வாகனங்களில் செல்வோர் தலைக் கவசம் அணிந்தும் பயணித்தனர்.
வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரி நகரில் பல சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.