ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி

159

கோவை: ''ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு தேர்தல் பணியாற்றியுள்ளோம். வாக்காளர்கள் எங்களுக்கு வெற்றி தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளோம்.

தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினர் வன்முறையை துாண்டும் வகையில் செயல்படுகின்றனர். தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை உணர்ந்து விட்டார். அதனால், ஏதேதோ குறை சொல்கிறார். அமைதியான மண்ணை கலவர பூமியாக மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது. அது பலிக்காது.

பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு சொல்லலாம். ஏதேனும் ஒரு இடத்தில் நிரூபிக்க வேண்டும். ஓட்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்; யார் வாங்குகிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு. தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவலை முழுமையாக மறுக்கிறேன். ஆதாரம் இருந்தால், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுவாக கொடுக்கலாம்.

தேர்தல் நடத்துவது மத்திய அரசின் தேர்தல் ஆணையம். கலெக்டர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளனர். பறக்கும் படையினர், சி.ஆர்.பி.எப்., போலீசார் இருக்கின்றனர். இதில், ஓட்டுச்சாவடியை நாங்கள் எப்படி கைப்பற்ற முடியும்? பா.ஜ., கூட்டணியில் இருப்பதால் அவர்கள் வேண்டுமானால், கைப்பற்ற முயற்சிக்கலாம்.

தோல்வி விரக்தியில் என்ன பேசுகிறோம் என தெரியாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு, கூறினார்.


@block_Y@

அண்ணாமலைக்கு சொத்து வந்தது எப்படி?



'செந்தில்பாலாஜி ஒரு காந்தி இல்லை... என அண்ணாமலை கூறியிருக்கிறாரே...' என, ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, செந்தில்பாலாஜி பதிலளிக்கையில், ''ஒரு வாட்ச்க்கு பில் கேட்டோம்; கடைசி வரை கொடுக்காமல், மளிகை கடை துண்டு சீட்டு போல் கொடுத்தார். விமானத்தில் ஏறி 'எமர்ஜென்சி' வழியை திறந்தனர். மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு வெளியே வந்தனர். வீட்டு வாடகை நண்பர்கள் தருகின்றனர்; சாப்பாட்டுக்கு காசு தருகின்றனர் என்றார்.

ஆயிரக்கணகான கோடியில் சொத்து வாங்குகிறார். இந்த சொத்தை எப்படி சம்பாதித்தார். 4 ஆட்டுக்குட்டி வைத்திருக்கிறேன்; அது போதும் என்றார். கோவையில் எத்தனை ஏக்கர் சொத்து வாங்கியிருக்கிறார்; அதன் மதிப்பு என்ன. எங்கிருந்து அந்த பணம் வந்தது. மண்வெட்டி எடுத்து வெட்டுனாரா. 1,000 ஆடு வாங்கி, தோட்டத்தில் மேய்த்தாரா, அவை குட்டி போட்டு, சந்தையில் விற்று, பூமி வாங்கினாரா.

குற்றச்சாட்டு சொல்பவர் தியாகியாக இருக்க வேண்டும். 50 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை பற்றி மக்களுக்கு தெரியும்,'' என்றார்.block_Y

Advertisement