கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

40


கோவை: கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளில், ஒரு வாக்காளருக்கு ரூ.2,000 வீதமும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் ரூ.1,500 வீதமும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடும் தெற்கு தொகுதியில், ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் வழங்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். தி.மு.க.,வினரும், கரூரை சேர்ந்தவர்களும் ஓட்டுக்கு பணம் வழங்கி வருவதாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் புகார் அளித்து இருந்தார்.



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) கோவை கலெக்டர் அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், ''கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா நடக்கிறது, தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தோம்.


இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேர்தல் அதிகாரி மெத்தன போக்குடன் செயல்படுகிறார்'' என குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் சமரச பேச்சு நடத்தியும், தர்ணா போராட்டத்தை கைவிட அம்மன் அர்ஜூனன் மறுப்பு தெரிவித்தார்.


நாளை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.


அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் மற்றும் கட்சியினர் தர்ணா போராட்டம் வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்

Advertisement