முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழா
பந்தலுார்: பந்தலுார் அருகே ஏலமன்னா அருள்மிகு ஸ்ரீ விநாயகர் மற்றும் முருகன் கோவில் பெருஞ்சாந்தி பெருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பந்தலுார் அருகே ஏலமன்னா பகுதியில், 500 அடி உயரம் உள்ள மலை உச்சியில், அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோவில் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பகுதியில் ஸ்ரீ விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில்களின் அஸ்டபந்தன பெருஞ்சாந்தி பெருவிழா கடந்த, 20ம் தேதி, காலை கொடியேற்று விழாவுடன் துவங்கியது.
தொடர்ந்து, 21ம் தேதி ஏலமன்னா ஆற்றங்கரையில் இருந்து ஊர் பொதுமக்கள் முன் நிலையில் புனித கங்கை நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு இயந்திர பிரதிஷ்டை, சங்கல்ப பூஜை, தேவப்பிரதிஷ்டை, மருந்து சாத்துதல் பூஜைகள் நடந்தது.
நேற்று காலை மகா கணபதி ஹோமம், தீர்த்த குடங்கள் எடுத்து செல்லுதல், விநாயகர் மற்றும் முருகனுக்கு கங்கை நீர் சாற்றுதல், பாலாபிஷேகம், சிறப்பு ஆராதனை., அலங்கார பூஜைகள், தீப திருக்காட்சி மற்றும் பூஜைகள் நடந்தது.
முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் பந்தலுார் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பூஜைகளை நெல்லியாளம் முருகன் கோவில் குருக்கள் சிவ ஸ்ரீ ரவிக்குமார் தலைமையிலான குழுவினரும், கோவில் நிர்வாக தலைவர் பாபு தலைமையிலான கிராம மக்களும் செய்திருந்தனர்.