அடிப்படை வசதியின்றி மாட்டு சந்தையால் அவதி: நகராட்சிக்கு பல லட்சம் வருவாய் வந்தும் வீண்
தேவகோட்டை:தேவகோட்டை நகருக்கு அருகில் நடக்கும் மாட்டு சந்தையில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி, வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேவகோட்டையில் நகர் எல்லையில் நகராட்சியின் கால்நடைகள் சந்தை செயல்பட்டு வருகிறது. சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக நடந்து வருகிறது. கால்நடைகள் சந்தைக்கு அதிகளவில் ஆடு, மாடுகள் வருகின்றன. மாநில அளவில் உள்ள மாட்டு சந்தைகளில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் இருந்து வாரந்தோறும் பல நூற்றுக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மாடுகளை விற்க, வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மாடுகளை ஏற்றிச் செல்ல மட்டுமே 100 வாகனங்கள் வருகின்றன. முக்கியமான சந்தையான இதில் ஆயிரக்கணக்கானோர் வந்தாலும் அடிப்படை வசதிகள் என்பது இல்லை. நகராட்சிக்கு கால்நடை சந்தை மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் வந்தாலும் நகராட்சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. முதல் நாள் மாலையே மாடுகளும் விற்பனையாளர்களும் வர துவங்குகின்றனர். இரவில் தங்கி வந்து செல்லும் மக்களுக்கு சந்தைக்குள் குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. வெயிலில் மாடுகள் காய்வதோடு மக்கள் வெயிலில் காய்ந்து அவதிப்படுகின்றனர். நிழல் கூரைகள் அமைக்கவே இல்லை. குத்தகைதாரர்கள் அவர்களால் முடிந்த சில பணிகளை செய்கிறார்கள்.
நகராட்சி தீர்வு தருமா:
வருடந்தோறும் பல லட்சங்களை நகராட்சி வருவாய் கிடைக்கும் இந்த மாட்டு சந்தையில் மக்களுக்கு குடிநீர், மாடுகளுக்கு குடிக்கவும் தண்ணீர், நிழற்கூரைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் நகராட்சி செய்து கொடுக்க வேண்டும். நாளுக்கு நாள் வெயில் அதிகரிக்கும் மக்களின் அவதியை நகராட்சி போக்க நடவடிக்கை அவசரமாக எடுக்க வேண்டும்.