மைசூரில் என்னென்ன பார்க்கலாம்?

- நமது நிருபர் -

கர்நாடகா என்றவுடன் முதலில் ஞாபகம் வருவது பெங்களூரு, மைசூரு தான். 'அரண்மனை நகரம்' என்று அழைக்கப்படும் மைசூரில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

இங்கு ஒரு மாதம் தங்கியிருந்து சுற்றிப்பார்த்தாலும் கூட அனைத்து இடங்களையும் பார்த்துவிட முடியாது. ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இருப்பினும், ஒரே நாள் பயணத்தில் எத்தனை இடங்களை சுற்றி பார்க்கலாம் என்பதை அறிந்து கொள்வோமா.

மைசூரு அரண்மனை மைசூரு என்றாலே அரண்மனை தான். இங்கு கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டும். ஒரு நபருக்கு 120 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். மைசூரு மன்னர்களான உடையார் வம்சத்தினரால் கட்டப்பட்டது. காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை சுற்றிப்பார்க்க அனுமதி.

இங்கு தசரா நாட்களில் கூட்டம் அலைமோதும். அரண்மனையில் உள்ள பழங்கால பொருட்கள், ஓவியங்களை பார்த்து ரசிக்கலாம்; படங்கள் எடுத்து மகிழலாம். அரண்மனை வளாகத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம். இரவில் அரண்மனையில் மின் விளக்கு அலங்காரத்தை மறக்காமல் பார்க்கவும்.

ஜெகன்மோகன் அரண்மனை கடந்த, 1861ல் மும்முடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது, வெளியில் இருந்து பார்ப்பதற்கே பிரமிப்பை ஏற்படுத்தும். இங்குள்ள சிற்பங்கள், ஓவியங்களை காண கண்கோடி வேண்டும். பிரமாண்டமான அரண்மனை நுழைவுவாயிலை மணிக்கணக்கில் பார்த்து கொண்டே இருக்கலாம். நேரம் போவதே தெரியாது. காலை 8:30 முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்படும்.

பிருந்தாவனம் தோட்டம் கர்நாடகாவின் முக்கிய நீர்தேக்கங்களில் ஒன்றான கே.ஆர்.எஸ்.,சின் பின்புறம் அமைந்து உள்ளது. மைசூரு - மாண்டியா மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்து உள்ளது. மைசூருக்கு வருவோர் கட்டாயம் மாண்டியாவில் உள்ள பிருந்தாவனம் தோட்டத்தையும் பார்க்க வேண்டும்.

இது, காவிரி ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பெரிய தோட்டத்தில் மாலை நேரத்தில் தண்ணீர் விளையாட்டுகள் தொடங்கும். மேலும், படகு சவாரியும் உண்டு. அதுபோல, இரவு நேரத்தில் மின்விளக்குகளுடன் தண்ணீர் விளையாட்டுகளும் நடக்கும். இதை பார்ப்பதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. பின், அப்பகுதியில் உள்ள உணவுகளை ருசித்து மகிழலாம். அருமையான இடம். அவசியம் பார்க்க வேண்டிய இடமும் கூட.

எப்படி செல்வது? இது போக ஏராளமான இடங்கள் உள்ளன. அனைத்தையும் பார்க்க நேரமும், பணமும் வேண்டும். இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களையும் ஒரே நாளில் பார்த்து ரசிக்க வேண்டுமென்றால் பொது போக்குவரத்து சரிப்பட்டு வராது. எனவே, சுற்றுலா பயணியர் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறப்பு.

Advertisement