சாய் சுதர்சன் அபார ஆட்டம்: குஜராத் அணி வெற்றி

3

சென்னை: சென்னை அணிக்கு எதிரான பிரீமியர் லீக் டி-20 போட்டியில், குஜராத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியின் துவக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இருவரும் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினர். 3வது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் 11 ரன் எடுத்திருந்த சாம்சன் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, வந்த உர்வில் படேலும் அதே ஓவரில் 4 ரன்னுக்கு அவுட்டானார்.

இதற்கு அடுத்த ஓவரில் இம்பேக்ட் வீரராக வந்த சர்பிராஷ் கான் ரன் ஏதுமின்றியும், பிரேவிஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால், சென்னை அணி 37 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதன்பிறகு வந்த துபே (22) ஓரளவுக்கு ரன் சேர்த்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் கேப்டன் ருதுராஜ் மட்டும் நிதானமாக ஆடி ரன் குவித்தார். அவர் 49 பந்தில் அரைசதம் அடித்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருத்துராஜ் 60 பந்துகளில் 74 ரன் குவித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் குவித்துள்ளது. குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டும், அர்ஷத் கான் 2 விக்கெட்டும், சிராஜ், சுதர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


159 ரன் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுப்மன் கில் 33 ரன்களுக்கு நுார் அஹ்மத் பந்தில் அவுட் ஆனார்.

சாய் அரை சதம்



மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய சாய் சுதர்சன் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜோஸ் பட்லர் நிதானமாக ரன்கள் சேர்த்தார்.
நன்றாக விளையாடி சாய் சுதர்சன் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 39 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் 16.4 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றிக்கு தேவையான 162 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ருத்துராஜ் மோசமான சாதனை:



நடப்பு பிரீமியர் லீக் சீசனில் அதிகபந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ருத்துராஜ் கெயிக்வாட் படைத்துள்ளார். முன்னதாக, லக்னோ அணி கேப்டன் பன்ட் 43 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றில் மந்தமான அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் முரளி விஜய், டிவைன் ஸ்மித் ஆகியோருடன் 4வது இடத்தை ருத்துராஜ் கெயிக்வாட் பகிர்ந்து கொண்டார். முதல் 3 இடங்களில் பார்த்தீவ் படேல் (53), ஹைடன் (51), முரளி விஜய் (50) ஆகியோர் உள்ளனர்.

Advertisement