காரியாபட்டி - நரிக்குடி ரோட்டில் அதிக வளைவுகளால் விபத்து அச்சம்

காரியாபட்டி: காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் ஏராளமான வளைவுகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்ற வருவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டியில் இருந்து நரிக்குடி 32 கி.மீ., தூரம் உள்ளது. முடுக்கன்குளம், எஸ். மரைக்குளம், பனக்குடி, சாலை இலுப்பைகுளம் என பெரிய ஊர்கள் உள்ளன. ராமேஸ்வரம், மானாமதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு ஏராளமான வாகனங்கள் அந்த வழித்தடத்தில் சென்று வருகின்றன. எப்போதும் ரோடு பிஸியாக இருக்கும். ஒரு வழித்தடமாக இருப்பதுடன், 15 இடங்களில் கொண்டை ஊசி வளைவு உள்ளது. கனரக வாகனங்கள் வளைவில் சென்று வர சிரமம் ஏற்படுகிறது.

இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. மழை நேரங்களில் ரோட்டை விட்டு கீழே இறக்க முடியாது. அது மட்டுமல்ல இரவு நேரங்களில் டூவீலர், காரில் அதிவேகமாக வருபவர்கள் வளைவு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். அருகில் வந்ததும் வளைவைக் கண்டு பிரேக் பிடிக்கின்றனர். இதில் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அடிக்கடி ஏற்படும் விபத்தை அறிந்து ஆங்காங்கே இரும்பு கர்டர்கள் அமைத்தனர். ஓரளவிற்கு வாகன ஓட்டிகள் கணித்து மெதுவாக செல்ல வசதியாக இருந்தது. அப்படி இருந்தும், ஒரு சிலர் வேகமாக வரும் போது கட்டுப்பாட்டை இழந்து இரும்பு கர்டரில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். பெரும்பாலான இடங்களில் கர்டர்கள் சேதம் அடைந்து கிடக்கிறது. அதனை சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு வளைவு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, நீளமான டாரஸ் லாரிகள் திரும்ப முடியாமல், நீண்ட தூரம் சுற்றிச் சென்று மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பல கி.மீ., தூரம் சுற்றி செல்வதால் பணம், நேரம் விரயமாகிறது.

இதனால் அப்பகுதியில் வரக்கூடிய தொழிற்சாலை தனியார் நிறுவனங்கள் துவங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முக்கிய சாலைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதோடு, அதிக வளைவுகள் உள்ள இடங்களை நேராக நிமிர்த்தி ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement