அரசு பேருந்து மோதி பெண் பலி: ரூ.37 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

சென்னை:செங்கல்பட்டு அருகே, அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், 37.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சிவராஜ், 39. இவரது மனைவி தேவி லோக சர்மிளா, 35; துணி வியாபாரி. இவர், 2024 பிப்.,25ல், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், தன் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து தேவி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்தில் இறந்த தேவியின் கணவர், 48 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கே.எஸ்.ராஜேஸ்குமார், இறந்த பெண்ணிண் கவனக்குறைவு விபத்துக்கு காரணம் என்ற, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக வாதம் ஏற்புடையதல்ல. விபத்துக்கு, பேருந்து டிரைவரின் கவனக்குறைவு தான் காரணம் என்பதால், இறந்த தேவி குடும்பத்தினருக்கு, 37 லட்சத்து, 64,000 ரூபாயை, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என, உத்தரவிட்டார்.

Advertisement