தி.மு.க., தேர்தல் பணி கண்காணிப்பு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு

- நமது நிருபர் -

சென்னை தேனாம்பேட்டை, எஸ்.ஐ.இ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ஓட்டு போட்டார்.

அவருடன் அவரது மனைவி துர்கா, அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோர் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக வாக்காளப் பெருமக்கள் பதிவு செய்வது ஓட்டு அல்ல. தமிழகத்தை காக்க, நீங்கள் ஏந்தும் கேடயம். உங்கள் ஓட்டு தான், தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

'ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமத்துவம், சமூக நீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களை பாதுகாக்கும் வகையில், உங்களின் ஓட்டு அமையட்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தல் பணிகளை திறம்பட கையாளவும், தி.மு.க., நிர்வாகிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் களத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சென்னையில் தி.மு.க., தலைமையகமான அறிவாலயத்தில், தேர்தல் பணி கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் முழுதும், இப்பணியில் 300 வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

அறிவாலயத்தில் மட்டும், 80க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். தமிழகம் முழுதும் இருந்து, தி.மு.க.,வினர், தேர்தல் தொடர்பான சந்தேகங்களை கேட்கவும், புகார்கள் தெரிவிக்கவும், இந்த கண்காணிப்பு மையத்திற்கு பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவில், இந்த மையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஓட்டுச்சாவடி பணிகள் குறித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று காலையிலும் இந்த மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அங்கு, அவர் இரண்டரை மணி நேரம் அமர்ந்திருந்தார்.

அப்போது, மையத்திற்கு வந்த புகார்களை எல்லாம், ஸ்டாலின் கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.

Advertisement