தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல்; பா.ம.க., அன்புமணி கண்டனம்

சென்னை: ரிஷிவந்தியம் தொகுதியில் பா.ம.க.,வுக்கு ஓட்டளித்தவர்கள் மீது, தி.மு.க.,வினர் கொடூர தாக்குதல் நடத்தியதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், கொனகள்ளவாடி கிராமத்தில் அமைக்கப்பட்ட 308, 309 ஆகிய ஓட்டுச்சாவடிகளில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டளித்தவர்கள் மீது, தி.மு.க.,வைச் சேர்ந்த குண்டர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதேபோல், பாசார் கிராமத்தில் 161வது ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க., கிளைச் செயலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தோல்வியாளர்களின் கடைசி ஆயுதம் வன்முறை தான் என்பர். அதை போலவே சட்டசபை தேர்தலில் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத தி.மு.க.,வினர், கடைசி நேரத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதை அனுமதிக்க முடியாது.

பா.ம.க.,வுக்கு ஓட்டளித்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அவர்களை ஏவி விட்ட தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement