திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றம்

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தீமிதி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், அதிகாலை 5:00 மணிக்கு, நடப்பாண்டிற்கான தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 7:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி முழுதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீமிதி விழாவையொட்டி, நேற்று முதல் வரும் 10ம் தேதி வரை தினமும் காலை மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறும்.

வரும் 29ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம், மே 1ம் தேதி சுபத்திரை கல்யாணம், மே 4ம் தேதி அர்ஜுனன் தபசு மற்றும் வரும் 10ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி விழாவும் நடைபெறுகிறது.

மே 11ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் மற்றும் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement