காஞ்சியில் உணவகங்கள் இயங்காததால் வெளியூர்வாசிகள் அவதி

காஞ்சிபுரம்:சட்டசபை தேர்தல் காரணமாக, காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் உணவகங்கள் இயங்காததால், வெளியூர்வாசிகள், சுற்றுலா பயணியர் என, பல தரப்பினரும் அவதிப்பட்டனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால், நகரின் முக்கிய சாலைகளான, காந்தி ரோடு, செங்கழுநீரோடை வீதி, இந்திரா காந்தி சாலை, காமராஜர் சாலை போன்றவை வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த சாலைகளில் இயங்கி வரும் முக்கிய உணவகங்கள் இயங்கவில்லை. சிறிய மெஸ் முதல் பெரிய பிரபலமான ஹோட்டல் வரை இயங்காததால், காஞ்சிபுரத்திற்கு வந்த வெளியூர்வாசிகள் காலை முதல் இரவு வரை சிரமப்பட்டனர்.

வெளி மாநிலங்களில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு வந்த சுற்றுலா பயணியர், பக்தர்கள் பலரும் கோவில்களுக்கு அருகில் உள்ள உணவகங்களை தேடி அலைந்தனர்.

ஊழியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியதால், பல தனியார் உணவகங்கள் விடுமுறை அளித்திருந்தன.

சிறிய உணவகங்கள் கூட இல்லாதது, பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. துணை மேயர் குமரகுருநாதனுக்கு சொந்தமான ஓட்டல்கள் மட்டும் திறந்திருந்தது.

மற்றபடி முக்கிய உணவகங்கள் மூடப்பட்டிருந்தன. கிராமப்புறங்களில் இயங்கிய சில உணவகங்கள், பலருக்கும் பசியாற உதவியது.

Advertisement