இந்த தேர்தலிலும் என் ஓட்டு 'கள்ள ஓட்டு' :பெங்களூருவில் இருந்து மதுரை வந்தவர் புலம்பல்

மதுரை: சட்டசபை தேர்தலில் நேற்று மதுரை மேற்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கள்ள ஓட்டு போட்டதாக சர்ச்சை எழுந்தது.

மதுரை மேற்கு தொகுதி பொன்மேனி தானதவம் புதுாரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஓட்டளிக்க வந்த ரமணா என்பவர், தன் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் தீர்வு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

* திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன். பெங்களூருவில் வேவை பார்க்கிறார். திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியில் ஓட்டளிக்க வந்தவரிடம், அவரின் ஓட்டை ஏற்கனவே செலுத்தி விட்டதாக கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரன் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு, கடந்த முறை பார்லி., தேர்தலிலும் எனது ஓட்டை மற்றொருவர் செலுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து டெண்டர் ஓட்டுப்பதிவு செய்தார்.

அவர் கூறுகையில், 'தொடர்ச்சியாக எனது ஓட்டை மற்றொருவர் செலுத்தி வருவது அதிர்ச்சியாக உள்ளது. தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். டெண்டர் ஓட்டளிக்கலாம் என அதிகாரிகள் கூறினர். அது ஓட்டு எண்ணிக்கையில் சேர்க்கப்படுமா என தெரியவில்லை' என்றார்.

இளைஞர் அழுகை செல்லுாரைச் சேர்ந்த ரமேஷ் 26, காலை 11:30 மணிக்கு மீனாட்சி அரசு கல்லுாரிக்கு சென்ற போது 'ஏற்கனவே ஓட்டு போட்டாச்சு' என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்து தனது பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்குவாதம் செய்து அழுததால், 'சேலஞ்ச்' ஓட்டுப்பதிவிற்கு அலுவலர்கள் அனுமதி அளித்தனர். இதையடுத்து அவர் தபால் ஓட்டு போல தனது ஓட்டை பதிவு செய்தார். தெப்பக்குளம் நிர்மலா பள்ளியில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டுச் சென்றதால் பிரச்னை ஏற்பட்டது.

Advertisement