மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்வு: தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் முக்கிய காரணம் 

கடலுார்:தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கடந்த தேர்தலைவிட கூடுதலாக 90 சதவீதம் ஓட்டு பதிவானதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர்.,(சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல்) தான் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் வாக்காளர்கள் துவக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக ஓட்டுப்போட்டனர்.

அதன் காரணமாக காலை 9:00 மணிக்கு 16.90 சதவீதம் ஓட்டுப்பதிவானது. 11:00 மணிக்கு 36.30, ஒரு மணிக்கு 55.3, பிற்பகல் 3:00 மணிக்கு 68.53, 5 மணிக்கு 81.95 சதவீதம் என உயர்ந்தது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் கடலுார் மாவட்டத்தில் 76 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. ஆனால் இந்த தேர்தலில் 15 சதவீத ஓட்டுக்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

இதற்கு காரணம் அதிகளவில் நீக்கப்படாமல் இருந்த இறந்தவர்கள் பெயர் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டது.

இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்தது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள், பெண்கள் மத்தியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மிகுந்த உத்வேகத்துடன் ஓட்டுப்போட்டனர். இதுஒரு புறமிருக்க தேர்தல் ஆணையம் முன் எப்போதும் இல்லாத அளவில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்தது.

Advertisement