'இணக்கமான கொள்கை தமிழகத்தில் வேண்டும்”'

தமிழக அரசு, 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி' துறையின் இன்றைய தேவைக்கேற்ற கொள்கை ரீதியிலான ஆதரவை தர வேண்டும் என்று, தமிழ்நாடு சூரிய மின்சார உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் 'ரெனிவெக்ஸ் 2026' எனும் 3 நாள் கண்காட்சி, கருத்தரங்கை துவங்கி வைத்த அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

2030க்குள் 500 ஜிகாவாட் உற்பத்தி இலக்கை அடைய திட்டமிட்டிருக்கிறோம். இதில், 252 ஜிகாவாட்டை தாண்டி விட்டோம்.

சூரிய மின்சக்தி விஷயத்தில் எங்கு இருக்கிறோம்?

ஒட்டுமொத்த இலக்கில் 280 ஜிகாவாட் என்பது சூரிய மின்சக்தி இலக்கு. இதில், 150 ஜிகாவாட்டை இந்தியா அடைந்து விட்டது.

சூரிய மின்சக்தியில் தமிழகத்தின் பங்கு என்ன?

2030க்குள் 20 ஜிகாவாட் சூரியமின்சார உற்பத்தி என்பது தமிழகத்தின் இலக்கு. இதில், 12 ஜிகாவாட்டை தமிழகம் தொட்டுள்ளது.

இத்துறைக்கு மானிய உதவி கிடைக்கிறதா?

'பிரதமரின் சூரிய வீடு' திட்டத்தின்கீழ் வீட்டுக்கூரைகளில் சூரிய மின்சக்தி பேனல்கள் அமைப்போருக்கு அதிகபட்சம் 78,000 ரூபாய் வரை மானியம் அளிக்கப்படுகிறது. மாநில அரசுகள் மானியம் ஏதும் வழங்குவதில்லை. ஆனால், புதுச்சேரி அரசு, அதிகபட்சம் 30 கிலோவாட் அமைப்புக்கு 30,000 ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. தமிழக அரசும் தனது சொந்த மானியத்தை வழங்கினால், இங்கும் இத்திட்டத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விவசாயிகளுக்கு என்று தனியாக திட்டங்கள் உண்டா?

ஆம். 'பிரதமரின் விவசாயி எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு இயக்கத்தின்' கீழ், 6,000 சதுர அடி நிலம் இருந்தாலே, 100 கிலோவாட் சூரிய மின்சக்தி அமைப்பை, அரசு மானியத்துடன் பெறலாம். இதற்கு 30 சதவீத மானியம் உண்டு. இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அரசு, யூனிட்டுக்கு 3.50 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளும்.

தமிழக அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் சூரிய மின் உற்பத்தி அமைப்பை நிறுவிய பின், அதை மின் வாரியத்தின் அமைப்போடு இணைக்க 'நெட்வொர்க்' மீட்டர் கிடைக்க 2 மாதங்கள் ஆகின்றன. இது விரைவுபடுத்தப்பட வேண்டும். மேலும், 500 கிலோ வாட் வரை உற்பத்தி திறனுள்ள சூரிய மின்சக்தி அமைப்புக்கு தனது எரிசக்தி பாதுகாப்பு துறையின் 'பாதுகாப்பு சான்றிதழ்' தேவையில்லை என்று புதுச்சேரி அரசு சொல்கிறது. தமிழகத்தில் அச்சலுகை இல்லை. நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக 1.65 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதை குறைக்க வேண்டும். எல்லாவித அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் கிடைக்க வேண்டும். மொத்தத்தில் எங்கள் துறைக்கு இணக்கமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை வேண்டும்.

'அவகாசம் தேவை'





இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்வேறு துறை வல்லுநர்கள் கூறியதாவது:

சூரிய மின்சார உற்பத்தியில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. மஹாராஷ்டிராவும் இதில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி வருகிறது. கேரளத்தில் தரிசு நிலம் பெரிய அளவுக்கு இல்லை என்பதால், வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுகின்றனர். மத்திய அரசு, ஜூன் 1 முதல் செல் தயாரிப்பு, உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு கால அவகாசம் கேட்டிருக்கிறோம்.

இவ்வாறு கூறினர்.

Advertisement