கோப்பை வென்றது வங்கதேசம் * நியூசிலாந்து அணி ஏமாற்றம்

சாட்டோகிராம்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்னில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, கோப்பை கைப்பற்றியது.
வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1-1 என சமனில் இருந்தது. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று சாட்டோகிராமில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
நஜ்முல் சதம்
வங்கதேச அணிக்கு துவக்கத்தில் தன்ஜித் (1), சயிப் (0) ஜோடி ஏமாற்றியது. சவுமியா 18 ரன் எடுத்தார். அடுத்து இணைந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ் ஜோடி அணியை மீட்டது. 4வது விக்கெட்டுக்கு 160 ரன் சேர்த்த போது, அரைசதம் அடித்த லிட்டன் தாஸ் (76) அவுட்டானார். சதம் அடித்த நஜ்முல், 105 ரன்னில் கிளம்பினார்.
கேப்டன் மெஹிதி ஹசன் (22) சற்று உதவ, வங்கதேச அணி 50 ஓவரில் 265/8 ரன் எடுத்தது. தவ்ஹித் (33) அவுட்டாகாமல் இருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு ஹென்றி நிக்கோல்ஸ் (4), நிக் கெல்லி ஜோடி துவக்கம் தந்தது. வில் யங் (19), கேப்டன் லதாம் (5) அணியை கைவிட்டனர். கெல்லி 59 ரன் எடுத்தார். முகமது அபாஸ் (25) தவிர மற்றவர்கள் ஏமாற்ற, நியூசிலாந்து அணி 160/9 என திணறியது. கடைசி நேரத்தில் பாக்ஸ்கிராப்ட் (75 ரன்) போராடிய போதும் வெற்றிக்கு போதவில்லை.
நியூசிலாந்து அணி 44.5 ஓவரில் 210 ரன்னில் ஆல் அவுட்டானது. வங்கதேசம் 2-1 என தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது.

Advertisement