கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு... 88.21 சதவீதம் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 4 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று விறுவிறுப்பாக நடந்த தேர்தலில்மாலை 6:00 மணி வரை 88.21 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. மாலை 6:00 மணிக்குள் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு பதிவு நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளது. தேர்தலையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என உளுந்துார்பேட்டை தொகுதியில் 14 பேர், ரிஷிவந்தியத்தில் 25 பேர், சங்கராபுரம் தொகுதியில் 22 பேர், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் 11 பேர் என மொத்தம் 72 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலையொட்டி மாவட்டத்தில் 679 இடங்களில் 1,435 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கி மாலை 6:00 வரை நடந்தது. ஓட்டுப் பதிவு துவங்கியதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இளைஞர்கள், இளம்பெண், முதியோர்கள் என வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.

இதனால் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது. பிரதான அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு பகல் பாராமல் துாக்கமின்றி தேர்தல் பணிகளை மேற்கொண்ட நிலையில், நேற்று ஓட்டுப் பதிவின் போது தங்களது கட்சியின் நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், பூத் ஏஜென்ட்டுகள் ஓட்டுச்சாவடி மையங்களில் விழிப்புடன் செயல்படும் வகையில் ஆலோசனைகளை வழங்கி தீவிர முனைப்புடன் செயல்பட்டனர்.

தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களது தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஓட்டுச் சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு சில இடங்களில் கட்சியினர் இடையே சிறு சிறு பிரச்சனை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெரிய அளவிலான பிரச்னைகள் இன்றி அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்த நிலையில், அனைத்து ஓட்டுச் சாவடி மையங்களிலும் பூத் ஏெஜன்ட்டுகள் முன்னிலையில் ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

சில மையங்களில் மாலை 6:00 மணிக்குள் வந்து வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு பதிவு நடந்தது. கள்ளக்குறிச்சி எஸ்.பி., அரவிந்த் மேற்பார்வையில் மாவட்டம் முழுதும் 2000க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தில் காலை 9:00 மணி நிலவரப்படி 17.08 சதவீதம் ஓட்டு பதிவும், 11:00 மணி நிலவரப்படி 37.13 சதவீதம், பகல் 1:00 மணி நிலவரப்படி 57.59 சதவீதம், மாலை 3:00 மணி நிலவரப்படி 70.76 சதவீதம், 5:00 மணி நிலவரப்படி 84.50 சதவீதம் ஓட்டுகளும், மாலை ௬ மணிக்கு ௮௮.௨௧ சதவீத ஓட்டுகள் பதிவாகியது.

Advertisement