போர் நிறுத்தம் எதிரொலி : ஈரான் தலைநகரில் 2 மாதங்களுக்கு பின் விமான நிலையம் திறப்பு

டெஹ்ரான்: ஈரானில் போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின் டெஹ்ரான் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரான் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இந்த மோதலால் ஈரானின் வான்பரப்பு முற்றிலும் மூடப்பட்டது. சர்வதேச விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்கள் ஈரான் வழியாகப் பயணிப்பதைக் தவிர்த்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலையீட்டால் கடந்த 8ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது-. இந்நிலையில், ஈரானின் சர்வதேச விமான போக்குவரத்து, நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சர்வதேச விமான நிலையம் 60 நாட்களுக்குப் பின், நேற்று அதிகாலை முதல் பயணியர் வருகையால் களைகட்டியது.


துருக்கியின் இஸ்தான்புல், ஓமனின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் மதீனா ஆகிய நகரங்களுக்கு முதற்கட்டமாக விமானங்கள் இயக்கப்பட்டன. விமான நிலையம் திறக்கப்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் குறைந்த பின்னரே, அதிகளவு விமானங்கள் ஈரானில் இருந்து இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது-.

Advertisement