தங்க காசு வழங்க க்யூ ஆர் கோடு; கோவை வடக்கில் விநியோகம்

4

கோவை: கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வீடு வீடாக தி.மு.க.,வினர் தங்கக்காசு வழங்க 'க்யூ ஆர்' கோடு அட்டைகளை வழங்கியுள்ளனர்.

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளான,வேலாண்டிபாளையம், கோவில்மேடு, சாய்பாபகாலனி கே.கே.புதுார், சங்கனுார், கண்ணப்பன் நகர், ரத்தினபுரி, நல்லாம்பாளையம், கணபதி, கணபதி மாநகர், காந்திமாநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை தங்ககாசுகளை பெற க்யூஆர் கோடு அட்டைகளை வாக்காளர்களுக்கு தி.மு.க.,வினர் வழங்கியுள்ளனர்.

இது குறித்து கண்ணப்பநகர், சங்கனுார் மக்கள் கூறியதாவது: நேற்று நள்ளிரவு(நேற்று முன்தினம்) கையில் பையுடனும் மற்றொரு கையில் வாக்காளர் பட்டியலுடனும் தி.மு.க.,வினர் எங்களது வீட்டு கதவை தட்டினர். கதவை திறந்து விசாரித்த போது இந்த க்யூஆர் கோடு அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள், தி.மு.க.,வுக்கு வாக்களியுங்கள், அதன் பின்இந்த அட்டையை எங்களிடமே திருப்பி கொடுங்கள்.

நாங்கள் இரண்டு கிராம் அளவிலுள்ள தங்கநாணயத்தை வழங்குவோம். அதற்கான டோக்கன் தான் இது. இதை பத்திரமாக வைத்திருங்கள் என்று சொல்லி கொடுத்து சென்றனர்.

அந்த க்யூஆர்கோடு அட்டையின் மறுபக்கத்தில் உதயசூரியன் சின்னம் அச்சடிக்கப்பட்டிருந்தது. அந்த க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து செய்து பார்த்த போது அதில் வரிசை எண்கள் இருந்தன. அந்த எண் அடிப்படையில் பரிசுத்தொகையை கொடுக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறினர்.

இது குறித்து பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''கோவை வடக்கு தொகுதியின் பெரும்பான்மையான பகுதிகளில் வினியோகம் செய்துள்ளனர். வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு இப்பணி மேற்கொண்டுள்ளனர். நாங்கள் பறக்கும் படையினரிடமும் போலீசாரிடமும் கையும் களவுமாக பிடித்துக்கொடுத்தோம்.

இது பற்றி கலெக்டர் பவன்குமாரிடமும் புகார் மனு கொடுத்திருக்கிறோம். இது குறித்து தேர்தல் கமிஷன் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார்.



@block_B@

'தி.மு.க.,வின் ஏமாற்றுவேலை'



கோவை, சிவானந்த காலனி டாடாபாத் காமராஜர் பள்ளியில் கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஓட்டு செலுத்திய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஓட்டுப்பதிவு விறு விறுப்பாக நடக்கிறது. மகளிரும், இளைஞர்களும் அதிக அளவு ஓட்டுக்களை ஆர்வமாக செலுத்துகின்றனர். கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ''க்யூ ஆர் கோடு'' அட்டைகளில் தி.மு.க.,சின்னம் பதித்து வீடு வீடாக வினியோகித்துள்ளனர். அந்த அட்டையை தேர்தல் முடிந்த பின்பு அருகே உள்ள தி.மு.க., அலுவலகத்தில் கொடுத்தால் தங்கம் மற்றும் வெள்ளிநாணயம் வழங்குவதாக கூறியுள்ளனர்.

இதெல்லாம் சாத்தியமா என்று வாக்காளர்கள் யோசிக்க வேண்டும். இப்படியெல்லாம் வாக்காளர்களை ஏமாற்ற திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கு ஆட்களை நியமித்து வீடுவீடாக க்யூஆர்கோடு அட்டைகளை கொடுத்துள்ளனர். தி.மு.க.,அரசு டிராமா செய்து, ஐந்தாண்டை ஏமாற்றிவிட்டது.

தற்போது வாக்காளர்களை வித விதமாக படம் காட்டி ஏமாற்றுகிறது. ஒவ்வொரு வீட்டு கதவையும் நள்ளிரவு தட்டும் தி.மு.க.,வினர் ''க்யூஆர் கோடு'' அட்டையை வினியோகித்துள்ளனர். இந்த ஏமாற்று வேலைகளை மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement