வருமான வரி சோதனை ஆதாரங்கள் இன்று காலை வெளியிடுவேன்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

30

சென்னை: 'வருமான வரி சோதனை விவகாரம் தொடர்பாக, என் தரப்பு ஆதாரங்களை, இன்று வெளியிடுவேன்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்துக்கு, தமிழகத்துக்கு ராகுல் வந்தபோது, தன்னை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காக, தன் வீட்டில் வருமான வரி சோதனையை நடத்துவதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறி இருந்தார். இதற்கு, வருமான வரித்துறை தரப்பில் மறுப்பு வெளியிட்டதோடு, காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பிரசாரம் செய்த போது, என்னை அரசியல் ரீதியாக முடக்க திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனை என்ற பெயரில், நான் தங்கியிருந்த இடங்கள், அலுவலகம் மற்றும் கூட்டணி கட்சியினரின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சம்பவங்களை, நான் வெளிப்படையாக ஊடகங்களின் வாயிலாக எடுத்துரைத்தேன். ஆனால், வருமான வரித்துறை அதிகாரிகள், இதை முற்றிலும் மறுத்து வருகின்றனர். உண்மையில் என்ன நடந்தது என்பதை, மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க, இந்த சம்பவங்கள் தொடர்பான முழு ஆதாரங்களை, இன்று வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் உள்ள மணிமங்கலத்தில், ஓட்டு போட்ட பின், செல்வப்பெருந்தகை கூறுகையில், “எனக்கு, உண்மையைச் சொல்ல எந்த தடையும் இல்லை. சட்ட ரீதியாக எதையும் எதிர்கொள்ள தயார். யார் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதை, இன்று காலை 11:00 மணிக்கு, செய்தியாளர்களை சந்தித்து, வீடியோ மற்றும் போட்டோ ஆதாரத்துடன் வெளியிடுவேன்,'' என்றார்.

Advertisement