திருத்தேரி ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

சிங்கபெருமாள் கோவில்: திருத்தேரி தாங்கல் ஏரி 30 லட்சம் ரூபாயில், துார்வாரப்பட்டு முறையாக பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி உள்ளது.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், திருத்தேரி தாங்கல் ஏரி உள்ளது.

இந்த ஏரி கடந்த 2022ல் 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ் 39.40 லட்சம் ரூபாயில், துார்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தி ஏரிகளைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டன.

மேலும் ஏரியின் நடுவே, பறவைகளுக்காக மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது.

பின் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2022 டிச., மாதம் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

திறப்பு விழாவின் போது, துார்வரப்பட்ட இந்த ஏரியை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என அப்போதைய கலெக்டர் ராகுல்நாத் அறிவுறுத்தினார்.

இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக, இந்த ஏரி பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறியுள்ளது.

கசிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், சேகரிக்கப்படும் குப்பைகள், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது.

இந்த ஏரி ஜி. எஸ்.டி.,சாலையோரத்தில் உள்ளதால், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் இறைச்சி கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர்.

எனவே இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

@block_B@திருத்தேரி ஏரி சென்னை புறநகரின் நுழைவுப் பகுதியில் ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ளது. தற்போது இந்த ஏரியில் குப்பைகளை கொட்டி அழிக்கும் வேலைகள் நடந்து வருகிறது. ஏரியில் உள்ள பொது கிணறு வாயிலாக ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தண்ணீரில் குப்பைகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.சுகுமாரன்,செங்கல்பட்டுblock_B

Advertisement