வளைவு பகுதியில் பிளக்ஸ் விபத்து ஏற்படும் அபாயம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் இருந்து வடசித்தூர் செல்லும் ரோட்டில், வளைவான பகுதியில் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளதால், விபத்து அபாயம் உள்ளது.
கிணத்துக்கடவில் இருந்து வடசித்தூர் செல்லும் ரோட்டில் அதிகளவில் லே-அவுட்டுகள் அமைந்துள்ளன. இதனால், இவ்வழித்தடத்தில் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் உயருகிறது. வாகன போக்குவரத்து அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், மக்கள் கண் பார்வைக்கு தெரியும் வகையில் ரோட்டின் வளைவு பகுதிகளில் ஆங்காங்கே ரோட்டோரத்தில் தனியார் விளம்பர பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது.
அதிகமாக காற்று வீசினால், பிளக்ஸ் ரோட்டில் சரிந்து விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே, ரோட்டோரத்தில் வைக்கப்படும் பிளக்ஸ்களை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், இதே ரோட்டில் ரயில்வே பாலம் அருகே அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இப்பகுதியை கடக்கும்போது கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.