தேர்தல் பரபரப்பு முடித்தது களை கட்டும் பந்தையம்
கம்பம்:தேர்தல் முடிந்ததால் நேற்று காலை முதல் அரசியல் கட்சியினரிடையே பந்தையம் 'பெட்டிங்' ஆரம்பமாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப். 23 ல் நடந்தது. கடும் வெப்பம் நிலவிய போதும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரம் நிறைவடைந்த பின் 'கவனிப்பு' அரங்கேறியது.ஒரு வழியாக நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடப்பதால், ஒட்டு எண்ணிக்கை வரும் மே 4 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு எண்ணிக்கைக்கு இன்னமும் 10 நாட்கள் உள்ளன.
இதற்கிடையே நேற்று காலை முதல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் கட்சிகளின் நிர்வாகிகளிடம் பதிவாகியுள்ள ஓட்டுகள் பற்றி விசாரணையை துவக்கி உள்ளனர்.மறுபுறம் 'பெட்டிங்' எனும் பந்தையம் ஆரம்பமாகி உள்ளது. கட்சிகளின் வெற்றி, தோல்விகளை குறிப்பிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் பலரும் மொட்டை அடிப்பது, மீசையை எடுத்துக் கொள்வது, பணம் மற்றும் பொருள்கள் , விருந்து கொடுப்பது என பலவித பந்தையங்களுக்கு உறுதி அளித்துள்ளனர். இதற்கான விடை மே 4 ல் தெரியும்.