மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் நடைமேடை அளவு நீட்டிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை நீட்டிப்பு பணி முழுவீச்சில் நடக்கிறது.

மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை, சென்னை, திருச்சி, திருப்பதி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் நின்று செல்கின்றன. சில சமயம் பாம்பன் பாலத்தில் பிரச்னை ஏற்பட்டாலோ, பாம்பன் கடலில் சூறாவளி வீசினால் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து ரயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

ஆனால் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் 22 ரயில் பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை வசதி இல்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துடன் இறங்கி செல்கின்றனர். இதனை தவிர்க்க சில நாட்களாக மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையை நீட்டித்து சிமென்ட் கலவையில் கட்டுமானப் பணி முழுவீச்சில் நடக்கிறது.

இப்பணி ஓரிரு வாரத்தில் முடிந்து விடும். இதன்பின் பயணிகள் பெட்டியில் இருந்து சிரமமின்றி இறங்கி செல்லலாம் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement