பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் பலி

நமது நிருபர்



தேனியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


@1brதேனி மாவட்டம் கம்பம் நகரில் காட்டுப்பள்ளி வாசல் தெருவில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான லட்சுமி பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று காலை பட்டாசு ஆலைக்கு தொழிற்சாலை பணியாளர்களான அய்யப்பன், நாகர்ஜுன், சூர்யா, தினேஷ் என்ற தீனா ஆகிய நான்கு பேரும் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளனர் .


தேர்தல் விடுமுறை காரணமாக இரண்டு நாட்கள் பணிக்கு யாரும் வராமல் தொழிற்சாலை மூடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்த தினேஷும், சூர்யாவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் வைத்துள்ள அறையை திறந்து உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டு அறையைத் திறந்த சூர்யாவும், தினேஷும் உடல் சிதறி பலியாகி உள்ளனர் .


அவர்களுடன் பணிபுரிய வந்த மற்ற இருவரும் வெடிசத்தம் கேட்டதை தொடர்ந்து வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துள்ளனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் உடல் சிதறி கிடந்த இறந்தவர்களின் உடற்பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் மேலும் வெடி விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கம்பம் நகர் பகுதியில் பட்டாசு ஆலை இல்லாத சூழ்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த பட்டாசு ஆலையை புதிதாக திறந்து உள்ளனர்.

Advertisement