ரயில்வேயில் 29,608 பணியிடங்கள் குறைப்பு வாரிய உத்தரவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

சென்னை: நாடு முழுதும், ரயில்வேயில், 29,608 பணியிடங்களை குறைக்க, ரயில்வே வாரியம் திடீரென உத்தரவிட்டுள்ளது. இதற்கு, தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளன.

ரயில்வேயில் மொத்தமுள்ள, 14 லட்சத்து, 80,455 பணியிடங்களில், இரண்டு சதவீதம் குறைக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது, 29,608 பணியிடங்களை, ரயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதில், அதிகபட்சமாக வடக்கு ரயில்வேயில், 3,303; கிழக்கு ரயில்வே, 2,544; மத்திய ரயில்வே, 2,492; மேற்கு ரயில்வே, 2,339 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளன.

இதில், தமிழகம், கேரளம் உள்ளடங்கிய தெற்கு ரயில்வேயில், 1,906 பணியிடங்களும், சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 217 பணியிடங்களும் குறைக்கப்பட உள்ளன.

இதற்கு, ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயில் இயக்கத்தின் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்படும் என, அவர்கள் தெரிவித்துஉள்ளனர்.

இதுகுறித்து, டி.ஆர். இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்க மூத்த நிர்வாகி மனோகரன் கூறியதாவது:

புதிய பாதை, இரட்டை பாதை மற்றும் மின்மயமாக்கல் என, புதிய பணிகள் அதிகரித்துள்ளன. 'வந்தே பாரத், அம்ரித் பாரத்' உட்பட பல்வேறு வகை ரயில்கள் இயக்கமும் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதிய பணியாளர்கள் இல்லாத சூழலில், தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமையை ஏற்றுவது சரியல்ல. ரயில்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்படும். இது, பயணியர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.

எனவே, பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட்டு, நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement