சிறப்பு பெட்டிகளில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை
சென்னை: 'ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகளில் பயணிக்க, இனி, யு.டி.ஐ.டி., எனும் தேசிய தனித்துவமான அடையாள அட்டை ஏற்புடையது' என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இந்திய ரயில்வே வாரியம் சார்பில் இயக்கப்படும், ஒவ்வொரு சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பயணிக்க, ரயில்வே வாரியம் வழங்கும் கட்டண சலுகை, 'பாஸ்' பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதர மாற்றுத்திறனாளிகள், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில், கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர்.
இந்நிலையில், தேசிய மாற்றுத்திறனாளி நலத்துறை வாயிலாக, யு.டி.ஐ.டி., எனும் தனித்துவமான அடையாள அட்டை பெற்ற அனைவரும், இப்பெட்டிகளில் இனி பயணிக்கலாம். ரயில்வே வாரியத்தின் கட்டண சலுகை பாஸ் பெற்றவர்களும், இப்பெட்டிகளில் பயணிக்கலாம்.
அத்தகைய பாஸ் பெறாத மாற்றுத்திறனாளிகள், கட்டண டிக்கெட் பெற்று, தங்கள் யு.டி.ஐ.டி., அட்டையை காட்டி, இந்த சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்.
அனுமதியின்றி இப்பெட்டியில் பயணிக்கும் இதர பயணியர் மீது, ரயில்வே சட்டத்தின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த வழிமுறைகள், அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.