ஓய்வு கால பலன் பெற அரசாணை வெளியிட பஸ் ஊழியர் கோரிக்கை
சென்னை: 'அரசு போக்குவரத்து கழகங்களில், இந்த மாதம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்கள் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்' என, தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக தலைமை செயலருக்கு, அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை பொதுச் செயலர் காமராஜ் அனுப்பியுள்ள கடிதம்:
அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெறுவோருக்கு, தற்போது மாதந்தோறும் அரசாணை வெளியிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, ஓய்வு கால பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வு கால பலன்கள் வழங்குவது குறித்து, அரசாணை எதுவும் வெளியிடவில்லை.
இந்த தொகை எப்போது கிடைக்கும் என, 1,500க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். எனவே, ஓய்வு கால பலன்களை தாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.