நாட்டின் முதல் பேசும் பொம்மை கலைஞரான திருநங்கை

பொம்மைகள் மூலம் நம் குரலில் பேசுவது, தொழில்நுட்பம் மற்றும் பொம்மலாட்ட நுட்பங்கள் மூலம் சாத்தியமாகி உள்ளது. பொம்மைகளில் இருக்கும் சிறிய குரல் பதிவுகள் நாம் என்ன பேசுகிறோமோ அதையே திரும்பி பேசும். இந்தியாவின் முதல் பேசும் பொம்மை கலைஞர் என்ற பெயரை பெற்றுள்ளார், கர்நாடகாவின் திருநங்கை ஜானு.

Tamil News
Tamil News

தன் வாழ்க்கை பயணம் குறித்து ஜானு கூறியதாவது:

என் சொந்த ஊர் ராய்ச்சூரின் சிரவாரா. பிறப்பில் ஆணாக பிறந்தேன். ஏழாம் வகுப்பு படித்த போது, என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். என் வயதுடைய சிறுவர்களுடன் விளையாடுவதை தவிர்த்து, சிறுமியருடன் விளையாட ஆரம்பித்தேன்.

நான் ஆணிலிருந்து பெண்ணாக மாறுவது எனக்கு பிடிபட்டது. பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில், இது பற்றி யாரிடமும் கூறாமல் இருந்தேன்.

மெஹந்தி போடுவது கல்லுாரி படிப்பை முடித்த பின், 2019ல் பெங்களூருக்கு வேலை தேடி வந்தேன். அப்போது, அக்கா என் கையில் கொடுத்த 4,000 ரூபாய் மட்டுமே இருந்தது.

என் கல்லுாரி சீனியர் ஒருவரின் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். என்ன வேலை செய்ய உனக்கு ஆர்வமாக உள்ளது என்று, அவர் என்னிடம் கேட்டபோது, மெஹந்தி போடுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதாக கூறினேன்

இதனால், மெஹந்தி போடும் ஒரு நிறுவனத்தில் என்னை வேலைக்கு சேர்த்து விட்டார். தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் நுணுக்கமாக மெஹந்தி போட கற்றுக் கொண்டேன். இரண்டு நாட்கள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நான் கலந்து கொண்டு பல பெண்களுக்கு மெஹந்தி போட்டு 40,000 ரூபாய் சம்பாதித்தேன். இவ்வளவு பெரிய தொகையை முதல்முறையாக நான் பார்த்தது அப்போது தான்.

நாம் சுயமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இனி நாம் நினைத்தது போல பெண்ணாக மாற வேண்டும் என்று, அதற்கான முயற்சியில் இறங்கினேன். உடல் அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினேன். ஆனால், திருநங்கையாக மாறிய பின், மெஹந்தி நிறுவனத்திலிருந்து என் வேலை பறிபோனது. அடுத்ததாக என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஆனாலும், வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசை எனக்கு இருந்தது. சிறு வயதிலிருந்து நான் கார்ட்டூன்களை அதிகம் விரும்பி பார்ப்பேன் என்பதால், அதில் வருவது போன்ற குரல்களில் பேசுவேன்.

இந்தக் கலையை பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த போது தான், பொம்மைகளுக்கு நாம் குரல் கொடுத்து பேச முடியும் என தெரிந்தது. கொல்கட்டாவுக்கு சென்று, அங்கு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பொம்மலாட்ட நுட்பங்களை கற்றுக்கொண்டேன்.

சமூக வலைதளங்களை பார்த்து நானே சொந்தமாக பேசும் பொம்மையை த யாரித்து, அதன் மூலம் தற்போது பொம்மலாட்ட நிகழ்ச்சிகளில் பேசி வருகிறேன். கல்லுாரி படிப்பையும் தொடர்ந்தேன். கல்லுாரிகளிலும் பொம்மை மூலம் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றது, அனைவரையும் என்னை திரும்பி பார்க்க வைத்தேன்.

மகிழ்ச்சி திருநங்கையான என்னிடம் பேசாமல் சென்ற பெண்களும் கூட, என்னை தேடி வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. என் கல்லுாரியில் இருந்து என் திறமையை அங்கீகரிக்கும் வகையில், வேர்ல்ட் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு வீடியோ அனுப்பி வைத்தனர்.

அந்த வீடியோவை பார்த்த நிறுவனம் இந்தியாவின் முதல் பேசும் உண்மை கலைஞர் என்று, என்னை அங்கீகரித்து பாராட்டு சான்றிதழ் அனுப்பி வைத்தது. இது என் வாழ்வில் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். நான் திருநங்கையான பின் வீட்டிற்கு ஒருமுறை கூட செல்லவில்லை.

இப்போது வீட்டிற்கு சென்று, என் தந்தையிடம் எனக்கு கிடைத்த சான்றிதழை காண்பித்து ஆசி பெற்று, நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள் என்று அவரிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு கூறினார்.

---நமது நிருபர்- -

Advertisement