பயணியர் இருக்கைகள் சேதத்தால் பயன்பாடின்றி பேருந்து நிறுத்தம்

திருப்புட்குழி:திருப்புட்குழியில் பேருந்து நிழற்குடை கட்டடத்தில் இருக்கை சேதத்தால், பயணியர் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி, திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தின் வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து, வேலுார், கிருஷ்ணகிரி, ஒசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் ஒசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து, காஞ்சிபுரம், சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன.

பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் நலன் கருதி, காஞ்சிபுரம் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மரகதம் குமரவேல் நிதியில், இருக்கையுடன்கூடிய பயணியர் நிழற்குடை கட்டடம் கட்டப்பட்டது.

இதில் இருக்கும் இருக்கைகள் சேதம் ஏற்பட்டு, பயணியர் அமர முடியாத அளவிற்கு இருக்கிறது. இதனால், சுகாதார நிலையத்திற்கு வருவோர் மற்றும் பேருந்துகளுக்கு காத்திருப்போர் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பயணியர் நிழற்குடை கட்டடத்தில் இருக்கும் இருக்கைகளை சீரமைத்து, சுகாதார நிலையத்திற்கு வருவோர் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement