மார்பு எலும்பு அகற்றப்பட்ட நோயாளிக்கு '3டி'யில் டைட்டானியம் பொருத்தி மறுவாழ்வு

சென்னை: புற்றுநோய் பாதிப்பால் மார்பு எலும்பு அகற்றப்பட்ட நோயாளிக்கு, எலும்பு வடிவிலான டைட்டானியம் எனும் உலோகம் பொருத்தி, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பு அதிகாரி ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:

எலும்புகளில் ஏற்படும் அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 59 வயது நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய், மார்பு எலும்பை சிதைத்து இருந்ததுடன், இடது பக்கமுள்ள, 6 விலா எலும்புகள் மற்றும் நெஞ்சுப்பகுதி வரை பரவி இருந்தது.

அவருக்கு டாக்டர்கள் சுஜய் சுசிகார், சக்தி உஷாதேவி, அருள், அருண் விக்டர், அரவிந்த், வரகுணபாண்டியன், சதீஷ், அருண்குமார், மயக்கவியல் டாக்டர்கள் கார்த்திகேயன், அருள், சுப்பிரமணியன், பவித்ரா அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.

இதில், பாதிக்கப்பட்ட மார்பு எலும்பு, விலா எலும்புகள் மற்றும் அதை சுற்றியுள்ள, மென்மையான திசுக்கள் அகற்றப்பட்டன. இதனால், அந்த இடத்தில், 15 × 10 செ.மீ., அளவில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.

இதை சீரமைக்க, நோயாளியின் உடல் அமைப்பிற்கு ஏற்ப, '3டி' வாயிலாக, டைட்டானியத்தில் பிரத்யேகமாக மார்பு எலும்பு வடிவமைக்கப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்ற பகுதியில் இருந்து திசுக்கள் பெறப்பட்டு, மார்பில் பொருத்தப்பட்டது.

மிகவும் அரிய மற்றும் சிக்கலாக கருதப்படும் இந்த உயர்தர அறுவை சிகிச்சை, அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது.

இச்சிகிச்சை, தனியார் மருத்துவமனைகளில் செய்தால், 12 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிடும். ஆனால் அரசு மருத்துவமனையில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், இலவசமாக செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement