அருணாசலேஸ்வரர் கோவிலில் செங்கற்கள் அடுக்கி வழிபாடு

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செங்கற்களை அடுக்கி, வழிபாடு செய்தது சர்ச்சையாகி உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசித்து விட்டு வெளியே செல்லும் வழியில், நான்காம் பிரகாரத்தில், கட்டுமான பணிக்கு செங்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்த பக்தர்கள், ஐந்தாம் பிரகாரத்திலுள்ள கோபுரம் அருகே அடுக்கி வைத்து விட்டு, சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என, வழிபட்டனர்.

இதுபோன்ற வழிபாட்டு முறை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இல்லாத நிலையில், யாரோ ஒரு பக்தர் செங்கல்லை அடுக்கி வழிபட்டதை தொடர்ந்து, மற்ற பக்தர்களும் அதேபோல வழிபாடு நடத்தியதாக தெரிகிறது.

கோவில் வளாகத்திற்குள், பக்தர்கள் அடுக்கி வைத்த செங்கற்களை, துாய்மை பணியாளர்கள் உதவியுடன் கோவில் நிர்வாகத்தினர் அகற்றினர்.

Advertisement