தி.மலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியும், கிரிவலப்பாதை மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல், 'சிசிடிவி' கேமரா அமைக்கும் பணியும் நடக்கிறது.

திருவண்ணாமலை கோவில் மலையை சுற்றி, மாதந்தோறும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை, கிரிவலம் செல்கின்றனர். இதில் கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், சித்ரா பவுர்ணமியன்றும், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வதாகவாக இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி வரும், 30 (வியாழக்கிழமை) இரவில் தொடங்கி மறுநாள் மே, ஒன்றாம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடக்கிறது. அதன்படி, திருவண்ணாமலைக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம் சாலை, செங்கம் சாலை, திருக்கோவிலுார் சாலை, மணலுார்பேட்டை சாலை, அவலுார்பேட்டை சாலை, வேலுார் சாலை உள்ளிட்ட மார்க்கங்களில், 15 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே கிரிவலப்பாதையில், 94, 'சிசிடிவி' கேமராக்கள் நிரந்தரமாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் மேலும், 150 'சிசிடிவி' கேமராக்களும், அருணாசலேஸ்வரர் கோவில், உள் மாடவீதி, வெளி மாடவீதி ஆகிய பகுதிகளில், 300 'சிசிடிவி' என, 450 கேமராக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் கிரிவலப்பாதையில் நடந்து வருகிறது.

Advertisement