ஓட்டு போட மே.வங்கத்தினர் பயணம்; தொழிலாளர்களின்றி நார் தொழிற்சாலைகள் பாதிப்பு
பொள்ளாச்சி: ''அசாம், மேற்கு வங்கம் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடுவதற்காக, தமிழகத்தில் உள்ள நார் தொழிற்சாலைகளில் பணியாற்றிய அம்மாநில தொழிலாளர்கள் சென்றதால், தென்னை நார் தொழிற்சாலைகளில் உற்பத்தி, 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது,'' என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் தெரிவித்தார்.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
தென்னை நார் தொழில், ஜனவரி முதல் ஆறு மாத காலத்துக்கு, சீசன் இருக்கும். அதன்பின், மூன்று மாதம் மந்தமாகவும், அடுத்த மூன்று மாதம் மழையால் இயக்க முடியாத நிலை ஏற்படும். இத்தொழிலால், தமிழகத்தில் நேரடி மற்றும் மறைமுகமாக, பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
தமிழக தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால், அசாம், மேற்கு வங்கம், பீஹார், மத்திய பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.
தற்போது, சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் காரணமாக, அசாம், மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், தென்னை நார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள, தொழிலாளர்களை கொண்டு, நார் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், 50 சதவீதம் தென்னை நார் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீசன் நேரத்தில் இதுபோன்ற சூழலால், லாபம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில், 125 நாட்கள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் இத்தொழிலை சேர்த்துள்ளதால், தொழில் பாதிக்காமல் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்திலும் அது போல செயல்படுத்தினால் பயன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.