விவசாயி மீது எஸ்.ஐ.,துப்பாக்கிச் சூடு: சி.பி.ஐ.,விசாரணை கோரி வழக்கு

மதுரை: ஆலங்குளம் அருகே பனைமர விவசாயி மீது எஸ்.ஐ.,துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்துார் பெருமாள்சேட் தாக்கல் செய்த மனு:

என் மகன் மணிகண்டன். விவசாயம் செய்கிறார். திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு சொந்தமாக பனை மரங்கள் உள்ளன. பனை மரங்களிலிருந்து பதநீர் சேகரித்து, பனை வெல்லம் தயாரிக்கிறோம்.கடந்த ஏப்., 7ல் மதியம் 12:45 மணிக்கு எந்தவித வாரன்ட அல்லது சம்மன் இன்றி, சீருடை அணியாத, மூன்று போலீசார், ஆலங்குளம் எஸ்.ஐ., இசக்கிராஜா தலைமையில், எங்கள் வீட்டிற்கு வந்தனர். இசக்கிராஜா துப்பாக்கியை ஏந்தியவாறு வந்து, மணிகண்டனை மிரட்டினார்.

அவரை எங்களின் பனைமர தோப்பிற்கு அழைத்து சென்றார். அங்குள்ள பானைகளில், கள் அல்லது பதநீர் உள்ளதா என்பதை சோதிப்பதற்காக மரத்தின் மீது ஏறுமாறு என் மகனிடம் இசக்கிராஜா கூறினார். அங்கு என் பேத்தி, பேரன்களுடன் நானும் சென்றேன்.

இசக்கிராஜா வலியுறுத்தியதால் மரத்தின் மீது மணிகண்டன் ஏற துவங்கினார். அப்போது அவரை இசக்கிராஜா ஆபாசமாக திட்டினார். நான் ஆட்சேபம் தெரிவித்தேன். என்னையும் ஆபாசமாக திட்டினார். என் மீது பொய் வழக்கு பதிவதாக மிரட்டினார். பேத்தி ஆட்சேபம் தெரிவித்தார். பேரன், பேத்திகளை மிரட்டிய இசக்கிராஜா, மரக்கட்டையால் தாக்க முயன்றார். கீழே இறங்கிய மணிகண்டன் தடுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தினார். மணிகண்டனின் காலில் சுட்டதில் காயம் ஏற்பட்டது. இசக்கிராஜாவிற்கு சிறிய காயம் ஏற்பட்டது. அதை பெரிய காயமாக சித்தரிக்கும் நோக்கில், அவர் என் மகனின் ரத்தத்தை எடுத்து, முகம், ஆடையில் பூசிக்கொண்டார்.

இதுபோன்ற செயலில் ஈடுபடுவது இசக்கிராஜாவிற்கு புதிதல்ல. ஏற்கனவே வெவ்வேறு சந்தர்ப்பங்களில், சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பாதுகாக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மணிகண்டனின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆலங்குளம் போலீசார் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை. அவர்கள் விசாரிக்க, தடை விதிக்க வேண்டும். வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். எங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பி.புகழேந்தி, ஏப்., 28க்கு ஒத்திவைத்தார்.

Advertisement