கடலை பிரித்தெடுக்க வந்தது மிஷின் கூலி தொழிலாளர்கள் வருத்தம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் கடலையை பிரித்தெடுக்க இயந்திரம் வந்ததால், கூலி வேலை செய்யும் பெண்கள் வருத்தத்தில் உள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில் டிசம்பரில் கடலை விதைப்பில் ஈடுபட்டவர்கள் கடந்த மாதம் பலர் அறுவடை பணியை துவக்கி முடித்த நிலையில், ஜனவரியில் கடலை விதைப்பில் ஈடுபட்டவர்கள் இம்மாதத்தில் பலர் அறுவடை பணியை தொடங்கியுள்ளனர்.

அதன்படி, திருக்கழுக்குன்றத்தில், இரும்புலியூர், எடையாத்துார், நடுவக்கரை, ஆனுார் உள்ளிட்ட பகுதிகளில் கடலை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.

கடலை செடி பறிக்கும் பெண்கள் கடலையை பிரித்தெடுக்க இயந்திரம் வந்துவிட்டதால் வருத்தம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், கடலை செடி பறிப்பதற்கும், செடியையும், கடலையும் தனித்தனியாக பிரிக்கும் வேலைகளில் நாங்களே ஈடுபட்டு வந்தோம். கூலியாக எங்களுக்கு கடலை கொடுப்பார்கள். அதை தினமும் சேகரித்து மூட்டையாக வைத்து மொத்த வியாபார கடைகளில் விற்றதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. தற்போது கடலையை பிரித்தெடுக்க இயந்திரம் வந்துவிட்டால், கடலை செடி பறிப்பதற்கு மட்டும் கூலியாக 350 ரூபாய் கிடைக்கிறது.

இவ்வாறு அனவர்கள் கூறினர்.

Advertisement